
திருவாரூர்
மன்னார்குடி அருகே ஆதிச்சப்புரத்தில் டாஸ்மாக் சாராயக் கடையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 19 பேரை காவல்துறை அதிரடியாக கைது செய்தது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி பிரதான சாலையில் ஆதிச்சப்புரத்தில் நீண்ட காலமாக டாஸ்மாக் சாராயக் கடை ஒன்று செயல்பட்டு வந்தது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி இந்த சாராயக் கடை அகற்றப்பட்ட நிலையில், அதேப் பகுதியில் கம்பன்குடி ஆர்ச் அருகே புதிதாக டாஸ்மாக் சாராயக் கடை திறக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் டாஸ்மாக் சாராயக் கடைக்கு எதிராக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அந்தக் கடை மூடப்பட்டது.
இதனிடையில் அந்தக் கிராமத்தில் ஒரு பிரிவினர் டாஸ்மாக் சாராயக் கடையை திறக்க வேண்டும் என்று சாலை மறியல், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இருதரப்பினரும் மாறிமாறி போராட்டம் நடத்தியதால் செப்டம்பர் 21-ஆம் தேதி சாராயக் கடை மீண்டும் திறக்கப்பட்டு சாராயம் விற்பனை மீண்டும் நடைபெறத் தொடங்கியது.
இந்த நிலையில், இந்த சாராயக் கடையை உடனடியாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி, டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டக் குழு சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு குழு ஒருங்கிணைப்பாளர் சுமதிமுருகன் தலைமை தாங்கினார்.
இதனை அறிந்த திருத்துறைப்பூண்டி காவல் கண்காணிப்பாளர் ஜெபராஜ் தலைமையிலான காவலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று பெண்கள் உள்பட 19 பேரை அதிரடியாக கைது செய்தனர்.