
திருவாரூர்
வீடுதோறும் கழிப்பறைகள் உள்ள மாவட்டமாக திருவாரூரை மாற்ற வேண்டும் என்றும் அதற்காக பத்தாயிரம் கழிப்பறைகள் கட்டப்பட உள்ளன என்று ம் மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் அருகேயுள்ள அடியக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைப்பெற்றது.
அதில் ஆட்சியர், “மக்கள் ஊராட்சி சட்ட விதிகள் குறித்து அறிந்துக் கொண்டு அரசின் நலத் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
திருவாரூர் மாவட்டத்தில் "தூய்மையே சேவை' என்ற திட்டத்தின்கீழ் கிராமங்களில் குப்பைகள் அகற்றப்பட்டு பேருந்து நிலையம், சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
பொதுச் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வகையிலும், திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்க்கும் வகையிலும் பத்தாயிரம் கழிப்பறைகள் கட்டப்பட உள்ளன.
வீடுதோறும் கழிப்பறைகள் உள்ள மாவட்டமாக மாற்ற வேண்டும் என்பதே மாவட்ட நிர்வாகத்தின் நோக்கம். எனவே, கழிப்பறை இல்லாத வீட்டு உரிமையாளர்கள் உடனடியா சம்பந்தப்பட்ட அலுவலரை அணுகி விண்ணப்பித்து அரசு இத்திட்டத்துக்கு வழங்கும் ரூ. 12 ஆயிரத்தை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில், மாவட்டத்தில் தொடர்புடைய அனைத்து அலுவலர்களும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசு உற்பத்தியாகாத வகையில் நல்ல தண்ணீர் உள்ள திறந்த பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும்.
ஊராட்சி நிர்வாகம் மக்களுக்கு விநியோகிக்கும் குடிநீர் தொட்டிகளில் குளோரின் பொடி போட வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்” என்று பேசினார்.
இந்தக் கூட்டத்தில் கோட்டாட்சியர் இரா. முத்துமீனாட்சி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உஷாராணி, பாஸ்கர், வட்டாட்சியர் ராஜன்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.