வருவாய்த் துறையை கண்டித்து போராடிய 150 பேர் கைது; கைதுக்கு பிறகும் தொடர் போராட்டத்தில் மக்கள்...

Asianet News Tamil  
Published : Apr 21, 2018, 08:33 AM ISTUpdated : Sep 19, 2018, 02:16 AM IST
வருவாய்த் துறையை கண்டித்து போராடிய 150 பேர் கைது; கைதுக்கு பிறகும் தொடர் போராட்டத்தில் மக்கள்...

சுருக்கம்

150 arrested for revenue department People arrested in the protests after arrest ...

தேனி
 
வருவாய்த் துறையை கண்டித்து மலையில் குடியேறி விடிய, விடிய போராடிய 150 பேரை காவலாளர்கள் கைது செய்தனர். கைதுக்கு பிறகும் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே சின்னஓவுலாபுரம் உள்ளது. இங்கு ஆதிதிராவிடர் காலனிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்துவிட்டனராம். 

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் உத்தமபாளையம் தாலுகா அலுவலகம் மற்றும் தேனி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் உத்தமபாளையம் தாசில்தார் பாலசண்முகம், துணை தாசில்தார்கள் நசீர், சுருளி மற்றும் வருவாய்த்துறையினர், போலீஸ் பாதுகாப்புடன் நிலம் குறித்த அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் குறிப்பிட்ட இடம் தனியார் பட்டா இடமாக உள்ளது என்று வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். இதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து எங்களுக்கு சொந்தமான இடத்தை சிலர் போலியான ஆவணங்கள் மூலம் பட்டா பெற்றுள்ளனர். எனவே, பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்றனர். 

ஆனால், தனியார் இடம் என்று அதிகாரிகள் திரும்பி சென்றதாக தெரிகிறது. வருவாய்த் துறையினரின் இந்த நடவடிக்கையை கண்டித்து, கிராமத்தை விட்டு வெளியேறி 100-க்கும் மேற்பட்ட மக்கள் அருகில் உள்ள வெள்ளைக்கரடு மலைப்பகுதியில் நேற்று முன்தினம் குடியேறி உணவு சமைத்து சாப்பிட்டு மலைப் பகுதியிலேயே போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. சென்னியப்பன், தாசில்தார் பாலசண்முகம், ராயப்பன்பட்டி ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் காவலாளர்கள் வெள்ளைக்கரடு மலைப்பகுதிக்கு வந்தனர். 

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களிடம் அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து திரும்பி சென்றனர்.இதனையடுத்து நேற்று 2-வது நாளாக போராட்டம் நீடித்தது. 

இதனையடுத்து அங்கு சென்ற உத்தமபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் சீமைச்சாமி தலைமையிலான காவலாளார்கள் போராட்டம் நடத்திய 150 பேரை கைது செய்தனர். பின்னர், அவர்கள் சின்னமனூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆக்கிரமிப்பு குறித்து அளவீடு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். மேலும், ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள் மீண்டும் அதே பகுதியில் நில அளவீடு செய்தனர். ஆனால், போதிய வெளிச்சம் இல்லாததால் அளவீடு பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து இன்று (சனிக் கிழமை) அளவீடு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதனை ஏற்றுக் கொள்ளாத மக்கள் கிராமத்தில் வீதியில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

பாமகவுக்காக அன்புமணி கூட்டணி பேசுவதா..? என்னடா கூத்து இது..? இங்கு நான் தான் எல்லாம்.. ராமதாஸ் கறார்
தங்கம் வெள்ளி வாங்க இதுதான் சரியான நேரம்.. சரசரவென குறைந்ததால் குஷியில் இல்லத்தரசிகள்!