
தஞ்சாவூர்
தஞ்சாவூரில், வீட்டில் தூங்கி கொண்டிருந்த அக்கா -தங்கையின் கழுத்தில் கிடந்த 4½ சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்ற டவுசர் கொள்ளையர்களை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அருகே உள்ள தங்கப்ப உடையான்பட்டி முதல் தெருவைச் சேர்ந்தவர் மணிராஜ். விவசாயியான இவருடைய மகள்கள் வினோதா (27), கீர்த்தி (20). இவர்களது வீட்டின் பின்புறம் மாமரம் உள்ளது. மேலும், மாடிபடியும் பாதி கட்டிய நிலையில் உள்ளது.
வினோதாவும், கீர்த்தியும் நேற்று முன்தினம் இரவு வீட்டின் மாடியில் உள்ள அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 4 மணியளவில் டவுசர் அணிந்திருந்த இரண்டு மர்ம நபர்கள், மாமரத்தின் வழியாக பின்புறமுள்ள மாடிபடிக்கு சென்று அங்கிருந்து மாடிக்கு ஏறினர்.
அங்கு மாடி அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அங்கே அக்கா, தங்கை தூங்கி கொண்டிருந்ததை பார்த்தனர். உடனே மர்மநபர்கள் இருவரும், வினோதா கழுத்தில் கிடந்த 2½ சவரன் தங்க சங்கிலியையும், கீர்த்தி கழுத்தில் கிடந்த 2 சவரன் தங்க சங்கிலியையும் பறித்தனர்.
அப்போது அவர்கள் இருவரும் கண் விழித்து பார்த்தனர். அருகில் இருவர் நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கா, தங்கை இருவரும் திருடன்.. திருடன்.. என்று அலறினர். அவர்களின் சத்தம் கேட்டு வீட்டின் கீழ் அறையில் படுத்திருந்த மணிராஜ் எழுந்து மாடிக்கு வந்தார். ஆனால், அதற்குள் மர்மநபர்கள் தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில் காவல் ஆய்வாளர் அலெக்ஸ்ராஜ், உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இது குறித்து வல்லம் காவலாளர்கள் வழக்குப்பதிந்தனர்.