
தமிழக தென் மாவட்டங்களின் கடலோர பகுதிகளில், இன்று காலை 8.30 மணி முதல் இரண்டு நாட்களுக்கு, 8.25 அடி முதல், 12 அடி உயரத்திற்கு, கடல் அலைகள் எழும்பும் என்றும் எனவே, கடலுக்கு அருகில், யாரும் செல்ல வேண்டாம்' என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக வருவாய் நிர்வாக ஆணையர், சத்யகோபால் செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழகத்தில், தென் மாவட்டங்களின் கடலோர பகுதிகளில், குறிப்பாக, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில், கடலோரத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில், கடல் சீற்றம் காணப்படும் என்று தெரிவித்தார்.
இன்று காலை, 8:30 மணியில் இருந்து, நாளை இரவு, 11:30 மணி வரை, 18 முதல், 22 வினாடிகள் இடைவெளியில், எட்டரை அடி முதல், 12 அடி உயரத்திற்கு, கடல் அலைகள் எழும்பும் என்றும், கடல் மிகக் கடுமையான சீற்றத்துடன் காணப்படும் என்றும் . இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.
இதனால் மீனவர்கள் மற்றும் கடலோர பகுதிகளில் உள்ள மக்கள், அரசு அவ்வப்போது வெளியிடும் அறிவுரை களை பின்பற்ற வேண்டும். கடல் சீற்றத் தின் காரணமாக, கடற்கரை பகுதிகளில், இதன் தாக்கம் பெரிதும் காணப்படும். என்றும் சத்ய கோபால் கூறினார்.
கடற்கரையை ஒட்டிய பகுதிகளில், படகுகள் செல்ல வேண்டாம். படகுகள், ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைவதை தவிர்க்க, போதிய இடைவெளியில் நங்கூர மிட்டு நிறுத்தி வைக்கவும். கடற்கரை பகுதிகளில், பொது மக்கள், பொழுது போக்கு விளையாட்டுகளிலும், வேடிக்கை பார்க்கும் செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் எச்சரித்தார்..
நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் படகுகளுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும், அதே நேரத்தில் படகுகள் கரைக்கு வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 'ஓசானிக் பினாமினா' காரணமாக, கடல் அலைகள், மிக உயரத்திற்கு எழக்கூடும் என்றும் சத்ய கோபால் தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள குறிப்பில்,
புயல் அல்லது காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் நேரங்களில் தான், கடலில் ராட்சத அலைகள் எழும். கடல் சீற்றத்துடன் காணப்படும். அதே போல, கடல் மட்டத்தில் வெப்பநிலை உயர்ந்தாலும், கடல் சூழல் மாறி, அலைகள் கொந்தளிப்பாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
அந்த அடிப்படையில், தற்போது, கோடை வெயிலின் வெப்பம் உயர்வால், கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகின்றன.என தெரிவிக்கப்பட்டுள்ளது.