
சிவகங்கை
தலித் மக்களுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசைக் கண்டித்து சிவகங்கையில் சாலை மறியல் போராட்டம் செய்ய முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், ஏஐடியூசி தொழிற் சங்கத்தினர் மற்றும் தமிழ்ப் புலிகள் அமைப்பினர் 78 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், ஏஐடியூசி தொழிற் சங்கத்தினர் மற்றும் தமிழ்ப் புலிகள் அமைப்பினர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலிருந்து, வ.உ.சி. சாலை, கோவிலூர் சாலை வழியாக அண்ணாசிலை பகுதிக்கு ஊர்வலமாகச் சென்று அங்கு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
இதற்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணைப் பொதுச் செயலர் பிஎல். ராமச்சந்திரன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் என். சாத்தையா ஆகியோர் தலைமைத் தாங்கினர்.
இந்த போராட்டத்தில், "தலித் மக்களுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசைக் கண்டிப்பது
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திற்கு எதிரான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை திருத்த வேண்டும் என்றும்,
மத்திய அரசு தலித் மக்களின் உரிமையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றும் வலியுறுத்தப்பட்டன.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் நகர துணைச் செயலர் ஏ.ஜி. ராஜா, மாநிலக் குழு உறுப்பினர் கண்ணன், ஏஐடியூசி நகரத் தலைவர் முருகன், செயலர் ராமராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இவர்களை சாலை மறியல் செய்ய விடாமல் தடுத்த காவலாளர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், ஏஐடியூசி தொழிற் சங்கத்தினர் மற்றும் தமிழ்ப் புலிகள் அமைப்பினர் 78 பேரை கைது செய்தனர்.