கச்சத்தீவில் மீன்பிடித்த 12 மீனவர்கள் கைது; 2 படகுகளை சிறைபிடித்து இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்...

First Published Jan 29, 2018, 8:18 AM IST
Highlights
12 fishermen arrested in Katchatheevu Sri Lankan navy again retaliates to capture 2 boats


இராமநாதபுரம்

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேசுவரம் மீனவர்கள் 12 பேரை கைது  செய்து சிறையில் அடைத்த இலங்கை கடற்படையினர் அவர்களின் இரண்டு படகுகளை சிறைபிடித்தும் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்றனர்.

அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மூன்று ரோந்து கப்பல்களில் வந்தனர் இலங்கை கடற்படையினர். அவர்கள் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தும், மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளையும் அறுத்து கடலில் வீசி எரிந்தும் அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், சிபிசன், டிக்கிரோஸ் ஆகிய இரண்டு பேருக்கு சொந்தமான படகுகளையும், அதில் இருந்த பிரைட்டன், டினோகர், ஆரோக்கியதாஸ், விஜயகுமார், ரோம்லிஸ், சந்தியாரெக்னட், ராஜ், ரீகன், லவ்சன், இமான், பிரியன்ரோஜ், ஸ்டீவ் வாக் ஆகிய 12 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்தனர் இலங்கை கடற்படையினர்.

அவர்களை தலை மன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டுச்சென்று விசாரணை நடத்திய பின்னர் அவர்களை பிப்ரவரி 12-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து மீனவர்கள் 12 பேரும் வௌனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாகவே பாக் ஜலசந்தி கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவே முடியாத ஒரு அவல நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் நேற்று பிடிபட்ட 12 மீனவர்களுடன் சேர்த்து 133 மீனவர்கள் இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!