வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்தி அவசரச் சட்டம் இயற்ற வேண்டி போராடிய 110 பேர் கைது... 

First Published Jul 3, 2018, 6:25 AM IST
Highlights
110 arrested for emphasis strengthening Amendment Act for prevention of abuse


அரியலூர்
 
வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்தி அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரயில் மறியலுக்கு முயன்ற பல்வேறு கட்சியினர் 110 பேரை காவலாளர்கள் கைது செய்தனர். 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திரவிடர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று இயிலை மறியலில் ஈடுபடுவதற்காக அரியலூர் கல்லூரி சாலையில் இருந்து அரியலூர் இரயில் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர். இதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்டச் செயலாளர் மணிவேல் தலைமைத் தாங்கினார்.

இந்தப் போராட்டம், "உச்ச நீதிமன்ற தீர்ப்பானது ஆதி திராவிடர் - பழங்குடியினர் வன்கொடுமைகள் (எஸ்.சி, எஸ்.டி.) தடுப்புச் சட்டத்தை நீர்த்து போகச் செய்யும் வகையில் உள்ளது. எனவே, வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்தி அவசரச் சட்டம் இயற்ற வேண்டும். இதனை அரசியல் சாசனம் 9-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும். 

அனைத்து கோயில்களிலும் ஆதிதிராவிட - பழங்குடியின மக்களுக்கு ஆலய வழிபாட்டு உரிமையை வழங்க வேண்டும். 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உண்மை நிலையை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்டது.

அரியலூர் இரயில் நிலையத்தை நெருங்கியபோது, இரயில் நிலைய நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அரியலூர் காவலாளர்கள் இரும்பு தடுப்புவேலிகளை அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தினர்.

இந்த நிலையில், இரயிலை மறிப்பதற்காக மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பியபடி வந்த போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி காவலாளர்கள் கைது செய்தனர். இதில், 12 பெண்கள் உள்பட 110 பேர் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட 110 பேரையும் காவலாளர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு அவர்கள் அனைவரையும் மாலையில் விடுவித்தனர்.

இந்தப் போராட்டத்தால் அரியலூர் இரயில் நிலையம் அருகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 

click me!