நகைக்கடை சுவற்றில் ஓட்டைபோட்டு 100 சவரன் தங்கம் கொள்ளை; மர்மகும்பலை பிடிக்க தனிப்படை போலீஸ் தீவிரம்...

First Published May 21, 2018, 7:47 AM IST
Highlights
100 pound gold jewels theft put hole on jewelery shop wall


தூத்துக்குடி
 
தூத்துக்குடியில் நகைக்கடையின் சுவற்றில் ஓட்டைபோட்டு 100 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பலை பிடிப்பதில் காவலாளர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பெரிய கிணற்று தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்ராஜா (40). இவர் எட்டயபுரம் பஜாரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் விஜயலட்சுமி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். 

கடந்த 18-ஆம் தேதி இரவு அந்த கடையின் சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்த மர்ம கும்பல் 100 சவரன் தங்க நகைகள், 10 கிலோ வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது. 

இதுகுறித்து எட்டயபுரம் காவலாளர்கள் வழக்குப்பதிந்தனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு எட்டயபுரம் 12-வது வார்டு பாறை தெருவில் உள்ள சலூன்கடை உரிமையாளர் வீட்டில் இதேபோல் சுவரில் துளையிட்டு 30 சவரன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், ரூ.13 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர். 

அந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள்தான் நகைக்கடையிலும் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று காவலாளர்கள் சந்தேகிக்கிறார்கள். மேலும், இந்த கொள்ளை சம்பவத்தில் ஐந்து பேர் கும்பல் ஈடுபட்டிருக்கலாம் எனவும் காவலாளர்கள் நினைக்கின்றனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மகும்பலை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் உத்தரவின்பேரில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்தத் தனிப்படை காவலாளர்கள் கொள்ளையர்களை பிடிப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.  இந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். 

கொள்ளையர்கள் உள்ளூரைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல் வட்டாரங்கள் திட்டவட்டமாக தெரிவிக்கின்றன. 

click me!