#Breaking: 10,11,12 மாணவர்களுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை..தேர்வுகள் ஒத்திவைப்பு..அறிவிப்பு வெளியானது..

By Thanalakshmi VFirst Published Jan 16, 2022, 2:36 PM IST
Highlights

தமிழகத்தில் 10,11 மற்றும் 12வகுப்பு மாணவர்களுக்கும் ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 19 அன்று தொடங்கி 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா பெருந்தொற்று காரணமாக 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தற்போது 10 முதல் 12 வரையிலான வகுப்புகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி வரும் 31ஆம் தேதி வரை 10, 11 மற்றும் 12 உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனையடுத்து, வரும் 19 அன்று தொடங்கி 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் மற்றும் இரண்டாம் அலை கொரோனா பெருந்தொற்று காரணாமாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு, மாணவர்களுக்கு  ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்பு எடுக்கப்பட்டது. இதனிடையே தமிழகத்தில் கொரோனா தொற்று சற்று குறைய தொடங்கிய நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் முதல் 9 முதல் 12 வகுப்புவரை பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன்பின், நவம்பர் மாதம் முதல் மழலையர் பள்ளி மற்றும் 1 முதல் 8 வரையிலான வகுப்புகள் திறக்கப்பட்டன. 

சுமார் 18 மாதங்களுக்கு பிறகு மாணவ - மாணவிகள் பள்ளிகளுக்கு சென்றனர். அதன்பின் வடகிழக்குபருவமழை காரணமாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தூத்துக்குடி, கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் மழைபாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் ஆட்சியர்கள் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தனர். இதனால் மாணவர்கள் தொடர்ந்து பள்ளிகளுக்கு செல்வது தடைப்பட்டு போனது.

இந்நிலையில் கடந்த நவம்பர் 27 ஆம் தேதி புதிதாக உருமாறிய ஒமைக்ரான் எனும் கொரோனா வைரஸ் முதல்முறையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் கண்டறியப்பட்ட ஒரு சில வாரங்களிலே பல்லேறு நாடுகளுக்கு பரவியது. இந்தியாவில் டிசம்பர் முதல் வாரத்தில் கர்நாடக மாநிலத்தில் 2 பேருக்கு ஒமைரான் தொற்று கண்டறியப்பட்டது. நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று பரவல் வேகமெடுக்க ஆரம்பித்தது. 

இதனிடையே இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நவம்பர் மாதத்தில் 7000க்கும் குறைவாக பதிவான நிலையில் தற்போது ஒரு நாள் பாதிப்பு மட்டுமே 2 லட்சத்தை தாண்டி பதிவாகியுள்ளது. அமெரிக்கா, பிரட்டன் , பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் கொரொனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. சுனாமி வேகத்தில் டெல்டா மற்றும் ஒமைக்ரான் கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்தது. 

எனவே இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா ஊரடங்கு கட்டுபாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. தமிழகத்தை பொறுத்தவரை இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு, கடற்கரைக்கு செல்ல தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. மேலும் மழலையர், நர்சரி பள்ளிகள் செயல்பட தடை போடப்பட்டது.1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. 

ஆனாலும் தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் ஒமைரான் மற்றும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை மாணர்களுக்கு ஏற்கனவே ஜனவரி 31 ஆம் தேதி விடுமுறை வழங்கப்பட்டது.இந்நிலையில் தற்போது 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் வரும் 31 ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் ஜனவரி 3 தேதி முதல் 15 வயது முதல் 18 வயது உள்ளோருக்கு கோவக்சின் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

click me!