
காஞ்சிபுரம்
அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழந்ததைக் கண்டித்து அவரது உறவினர்கள் சாலை மறியல் ஈடுபட்டபோது ஏற்பட்ட வன்முறையில் சமாதானம் பேசவந்த காவல் கண்காணிப்பாளர் மீது கல்வீசிய 10 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த பேரமனூர் புத்தர் தெருவைச் சேர்ந்தவர் வரதன். அவரது மனைவி ராதா (34). இவர்கள் கடந்த சனிக்கிழமை இருசக்கர வாகனத்தில் செங்கல்பட்டு பஜார் வீதிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
மகிந்திரா சிட்டி சிக்னல் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து ஒன்று வேகமாக மோதியதில் ராதா நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த வரதன் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த அவரது உறவினர்களும், கிராம மக்களும் சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டதால் செங்கல்பட்டு - தாம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சிலர் காவலாளர்கள் மீது கல்வீசித் தாக்கியதில் காவல் கண்காணிப்பாளர் ஹதிமானிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, காவலாளர்கள் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
இந்த நிலையில், கல்வீச்சில் ஈடுபட்ட நபர்கள் மீது மறைமலைநகர் காவலாளர்கள் வழக்குப்பதிந்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் கூட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் வன்முறையில் ஈடுபட்டதாக அரிகிருஷ்ணன் (23), ஸ்டாலின் (22), உன்னிகிருஷ்ணன் (23), சிவகுமார் (23), சதீஷ் (23), கோகுல் (26), பாலமுருகன்(26), பிரசாத்(20), ரியாக் (29) அரிகுமார் (22) ஆகிய 10 பேரைக் கைது செய்தனர்.
இந்த பத்து பேர் மீதும் வன்முறையில் ஈடுபட்டது, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது, அரசு வாகனத்தைச் சேதப்படுத்தியது உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதியின் உத்தரவின்பேரில் அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.