ஒரு கிலோ தக்காளியைக் கொண்டுபோய அவர் கடையில் கொடுத்தால், அதற்கு பதிலாக ஒரு கிலோ சிக்கன் பிரியாணி வழங்குகிறார். அதேபோல், இரண்டு கிலோ சிக்கன் பிரியாணியை வாங்கினால் அரை கிலோ தக்காளி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்துவரும் நிலையில், ஒரு கிலோ தக்காளியைக் கொடுப்பவர்களுக்கு ஒரு கிலோ பிரியாணியை ஒரு கடையில் கொடுத்துள்ளார் ஒரு கடைக்காரர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதிலிருந்தே பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. கடந்த வாரம், தமிழகம் மட்டுமல்லாமல், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் கடும் மழை பெய்தது. மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டும், போக்குவரத்து சிக்கல் காரணமாகவும் கடந்த ஒரு மாதமாகவே காய்கறிகள் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தக்காளி விலை றெக்கைக் கட்டி பறக்கிறது. தக்காளி விலை ரூ.150 வரை உயர்ந்து ஷாக் அடிக்கத் தொடங்கியிருக்கிறது.
கிலோ தக்காளி ஆப்பிள் விலை அளவுக்கு உயர்ந்துவிட்டதால், நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் தக்காளி உள்பட காய்றிகள் வாங்க தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மேல்மருத்துவத்தூர் - வந்தவாசி சாலையில் உள்ள சோத்துப்பாக்கம் என்ற பகுதியைச் சேர்ந்த ஞானவேல் என்பவர் ஒரு காரியத்தைச் செய்திருக்கிறார். அங்கு ஆம்பூர் பிரியாணி என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறார். அவர் தக்காளி ஆபர் என்ற பெயரில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதாவது ஒரு கிலோ தக்காளியைக் கொண்டுபோய அவர் கடையில் கொடுத்தால், அதற்கு பதிலாக ஒரு கிலோ சிக்கன் பிரியாணி வழங்குகிறார். அதேபோல், இரண்டு கிலோ சிக்கன் பிரியாணியை வாங்கினால் அரை கிலோ தக்காளி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். தக்காளியையும் பிரியாணியையும் ஒரே நேரத்தில் ஆபர் மூலம் கொடுப்பதால், இவருடைய கடைக்கு கூட்டம் படையெடுத்திருக்கிறது. இந்தப் பிரியாணி - தக்காளி ஆபர் விற்பனை இணையத்தில் வைரலாகிவிட்டது. “பழைய பண்டமாற்று முறைதான் விலையேற்றத்துக்கு ஒரே தீர்வு. அதை கொண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான் எனது உணவகத்தில் இதைப் பின்பற்றுவதாக” ஞானவேல் தெரிவித்துள்ளார்.