வேலூர் அரசு மருத்துவமனையில் பிறந்து 2 நாட்களேயான ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 25). கூலித் தொழிலாளியான இவர் தனது மனைவி சின்னியை பிரசவத்திற்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கடந்த 27ம் தேதி அனுமதித்துள்ளார். அனுமதிக்கப்பட்ட தினமே இரவில் சின்னிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த நாள் பிரசவ வார்டுக்கு தாயும், சேயும் மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இன்று காலை 9 மணி அளவில் சின்னியின் கணவர் உணவு வாங்கி கொடுத்துவிட்டு வார்டுக்கு வெளியே சென்ற நிலையில் சின்னி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது குழந்தை அழுததாகச் சொல்லப்படுகிறது. அப்போது அங்கு இருந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர் சாப்பிட்டு முடிக்கும் வரை குழந்தையை தன்னிடம் கொடுக்குமாறும், தான் பார்த்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பி சின்னியும் தனது குழந்தையை அப்பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார். பின்னர் அப்பெண் பிஞ்சு குழந்தையுடன் திடீரென மாயமானார். இது தொடர்பாக கோவிந்தன், சின்னி தம்பதியர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், சின்னி அடையாளம் காட்டிய பெண், கையில் கட்டை பையில் குழந்தையை வைத்து கடத்திச் சென்றது தெரிய வந்துள்ளது. இது மேலும் கடத்திச் சென்ற பெண்ணை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.