வேலூர் மக்களவை தொகுதியில் மும்முனை போட்டி நிலவினாலும் தேர்தல் களத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் மற்றும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த இடையே தான் போட்டி என்று அரசியல் களம் சொல்கிறது.
வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் கதிர் ஆனந்துக்கு போகும் இடமெல்லாம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருவதால் இந்த முறையும் நமக்குத்தான் வெற்றி என்ற உற்சாகத்தில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளன. ஆளும் திமுகவை பொறுத்த அளவில் 21 மக்களவை தொகுதிகளில் நேரடியாக களமிறங்கியுள்ளது. இதில், குறிப்பாக வேலூர் மக்களவை தொகுதி ஸ்டார் தொகுதியாக பார்க்கப்படுகிறது.
இந்த தொகுதி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக கடந்த முறை கடும் போட்டி கொடுத்து 8000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த ஏ.சி.சண்முகம் இந்த முறை பாஜக சார்பாக தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். அதேபோல் அதிமுக சார்பில் வேட்பாளரான மருத்துவர் பசுபதி போட்டியிடுகிறார். மும்முனை போட்டி நிலவினாலும் தேர்தல் களத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் மற்றும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த இடையே தான் போட்டி என்று அரசியல் களம் சொல்கிறது.
இந்நிலையில், கதிர் ஆனந்த் பிரச்சாரத்திற்கு போகும் இடமெல்லாம் மக்கள் நல்ல ஆதரவை தந்து வேட்பாளரை உற்சாகப்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இளைஞர் அணி தலைவரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினும் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தது அவருக்கு புதிய தெம்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 5 ஆண்டுகளில் வேலூர் தொகுதி மக்களுக்கு தாம் செய்த பணிகளையும், திமுக சாதனையும் சொல்லி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
குடியாத்தம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கதிர் ஆனந்த்: கடந்த முறை நான் எம்.பி தேர்தலுக்கு நின்றபோது இந்த குடியாத்தம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஒரு புறவழிச்சாலை அமைத்து தருவேன் என கூறினேன். நான் வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்றபோது தொடர்ந்து இதுகுறித்து வலியுறுத்தி வந்தேன். ஆனால் அவர் நிதிநிலையை காரணம் காட்டி புறவழிச்சாலை அமைக்க மறுத்து வந்தார்கள்.
ஒருநாள் நான் நாடாளுமன்ற கூட்டத்திலேயே வைத்து மத்திய அமைச்சரிடம் ‘நீங்கள் புறவழிச்சாலை அமைத்து தருகிறீர்களா? அல்லது நான் தற்கொலை செய்துகொள்ளட்டுமா? கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் நான் உயிரோடு இருக்க மாட்டேன்’ என சொன்னேன். அதற்கு பின் என் பிறந்தநாள் அன்று எனக்கு போன் செய்து வாழ்த்திய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, எனக்கு பிறந்தநாள் பரிசாக நான் கோரிக்கை விடுத்து வந்த குடியாத்தம் புறவழிச்சாலையை அமைத்து தருவதாக சொன்னார் என கூறினார். இந்நிலையில், 3 ஆண்டுகளில் ஆளும் கட்சி செய்த சாதனை கூட்டணி பலம் மற்றும் பாஜகவுக்கு எதிர்ப்பாக உள்ள சிறுபான்மையினர் வாக்கு நமக்குத்தான் கிடைக்கும் என்பதால் கதிர் ஆனந்த் வெற்றி உறுதி என்று அரசியல் கள நிலவரம் கூறுகிறது.