அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி விசிக பிரமுகரின் மகன் பலி..! அண்ணனுக்கு உணவு கொண்டு சென்ற போது நிகழ்ந்த பரிதாபம்..!

By Manikandan S R SFirst Published Oct 3, 2019, 1:22 PM IST
Highlights

வேலூர் அருகே அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வேலூர் அருகே இருக்கும் சத்துவாச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேலூர் மாவட்ட துணைச் செயலாளராக இருக்கிறார். இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் பாலாஜி வேலூரில் இருக்கும் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இளைய மகன் சிந்தனைச் செல்வன் அங்கிருக்கும் ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருக்கிறது. இதனால் வீட்டில் இருந்த சிந்தனைச் செல்வன், மருத்துவமனைக்கு வேலைக்கு சென்ற தனது அண்ணனுக்கு மதிய உணவு கொடுக்க சென்றிருக்கிறார். பின்னர் மாலை 4 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் சேலம்-ஆற்காடு சாலையில் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஆற்காடு நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. சைதாப்பேட்டை முருகன் கோவில் அருகே பேருந்து வந்த போது அதை முந்திச்செல்ல முயன்றிருக்கிறார் சிந்தனைச் செல்வன். அந்த நேரத்தில் எதிரே வாகனம் ஒன்று வரவே, அதில் மோதி நிலை தடுமாறி கீழே விழுந்த அவர், பேருந்தின் சக்கரத்தில் சிக்கி இருக்கிறார்.

இதில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிந்தனைச்செல்வனை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவலர்கள் மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து விட்டு, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியினரிடையே சோகத்தை எற்படுத்தி இருக்கிறது. 
 

click me!