அந்தமானில் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த வாணியம்பாடியைச் சேர்ந்த ராணுவர் வீரர் செந்தில் குமாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்தவர் செந்தில் குமார். நாட்டிற்காக சேவையாற்ற வேண்டும் என்ற லட்சியத்தோடு இருந்த அவர், ராணுவத்தில் சேர்ந்து மத்திய துணை ராணுவ படையின் (சி.ஆர்.பி.எப்.) தலைமை காவலராக அந்தமானில் பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் தன்னுடன் பணியாற்றும் நண்பர்களுடன் கடலுக்கு குளிக்க சென்றார். உற்சாகமாக குளித்து கொண்டிருந்த செந்தில் குமாரை ஒரு ராட்சத அலை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் செந்தில் குமாரை தேடிக் கொண்டிருக்கும் போது உயிரற்ற அவரது உடல் கரை ஒதுங்கியது. அதை பார்த்து அவர்கள் செய்வதறியாது திகைத்தனர்.
உடனடியாக அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் உடல் விமானம் மூலம் சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது. அங்கு துணை ராணுவ படை சார்பாக செந்தில் குமாருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதுவரையிலும் ராணுவ உடையில் மிடுக்காக காட்சியளித்த செந்தில்குமாரை உயிரற்று கிடப்பதை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி துடித்தனர். செந்தில்குமாரின் 14 வயது மகள் ஸ்ரீதன்யா
உணர்ச்சிப்பெருக்கில் தந்தைக்கு அஞ்சலி செலுத்தியது ராணுவ வீரர்களையும் கலங்கச் செய்தது.
அனைவர் முன்னிலையிலும் தந்தைக்கு 'பரேட் சவுதான்', பரேட் சல்யூட்’ என்று கூறி ஸ்ரீதன்யா சல்யூட் அடித்தது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது. தொடர்ந்து ‘பரேட் தம்’, ‘பரேட் லாக் அவுட்’ என்று அடுத்தடுத்த கட்டளைகளையும் தழுதழுத்த குரலில் சொல்லி தந்தைக்கு தனது வீரவணக்கத்தை செலுத்தினார் ஸ்ரீ தன்யா.
ஒருகட்டத்தில் இருகைகளை கூப்பி தரையில் விழுந்து 'அப்பா' என்று அழ தொடங்கினார். இந்த காட்சி அங்கிருந்தவர்களை கண்ணீர் கடலில் மூழ்கடித்தது. 'தந்தையின் இடத்தை நான் நிரப்பி நாட்டிற்காக சேவை செய்வேன்' என்று ஸ்ரீதன்யா செந்தில் குமார் உடல் முன்பாக உறுதி எடுத்துக்கொண்டார்.
தொடர்ந்து செந்தில்குமாரின் உடல் காரில் வாணியம்பாடி எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.