அஜித்தின் மங்காத்தாவை தூக்கி சாப்பிட்ட துணிகர சம்பவம்..! பார்சல் லாரியில் நடந்த பலே திருட்டு.. மர்ம கும்பலுக்கு வலைவீச்சு..!

By Manikandan S R SFirst Published Sep 26, 2019, 1:10 PM IST
Highlights

ஆற்காடு அருகே தனியார் பார்சல் நிறுவன லாரியில் கதவை உடைத்து பொருட்களை திருடிய மர்ம கும்பலை  காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா படத்தில் ஓடும் லாரியில் இருந்து பணத்தை திருடும் சம்பவம் இடம்பெற்றிருக்கும். அதே பாணியில் தற்போது ஒரு திருட்டு அரங்கேறியிருக்கிறது.

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியை சேர்ந்தவர் ஜம்புலிங்கம்(38). இவர் சென்னையில் இருக்கும் ஒரு தனியார் பார்சல் நிறுவன லாரியில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். தினமும் பல்வேறு ஊர்களுக்கு சென்னையிலிருந்து பார்சல்களை ஜம்புலிங்கம் ஏற்றிச்சென்று டெலிவரி செய்வது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து பார்சல்களை ஏற்றிக்கொண்டு பெங்களூர் நோக்கி ஜம்புலிங்கம் சென்று கொண்டிருந்தார். வேலூர் மாவட்டம் ஆற்காட்டை கடந்து ரத்தனகிரி பகுதியில் லாரி வந்துகொண்டிருந்தது. அப்போது ஓட்டுநர் ஜம்புலிங்கம் லாரியை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு களைப்பு நீங்குவதற்காக சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் ஒன்று லாரியில் இருந்த பார்சல்களை கொள்ளையடிக்க திட்டமிட்டது.

இதையடுத்து ஜம்புலிங்கம் தூங்கிக் கொண்டிருப்பதை அறிந்த அந்த கும்பல் லாரியின் பின்பக்க கதவை உடைத்து திறந்தனர். அதில் இருந்த துணி மூட்டைகள், பெயிண்ட் டப்பாக்கள் ஆகியவற்றை மற்றொரு ஜாடியில் ஏற்றினர். அப்போது திடீரென்று சத்தம் கேட்டு விழித்த ஓட்டுனர் ஜம்புலிங்கம் லாரியின் பின்னால் சென்று பார்த்திருக்கிறா.ர் உடனே அந்த மர்ம கும்பல் லாரியில் ஏற்றிய பொருட்களுடன் அந்த இடத்தைவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றனர்.

பெங்களூர் சாலையில் இருந்து சென்னை நோக்கி சென்ற அந்த திருட்டு லாரியை மடக்குவதற்காக ஓட்டுநர் ஜம்புலிங்கம் தனது லாரியில் துரத்தித் சென்றார். வேப்பூர் பகுதியில் மர்ம கும்பல் அவர்களது லாரியை நிறுத்தியது. அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற ஜம்புலிங்கம் அந்த கும்பலிடம் சென்று திருடிய பொருட்களை திரும்ப தரும்படி எச்சரிக்கிறார். இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் ஜம்பு லிங்கத்தை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

படுகாயங்களுடன் கிடந்த ஜம்புலிங்கத்தை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் திருட்டு சம்பவம் குறித்து ரத்தினகிரி காவல் நிலையத்தில் ஓட்டுநர் ஜம்புலிங்கம் புகார் அளித்தார். அவரின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை தப்பியோடிய மர்ம கும்பலையும் அவர்கள் சென்ற லாரியும் தீவிரமாக தேடி வருகின்றனர். திருடு போன பொருட்களின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

click me!