அதிகாலையில் கேட்ட பயங்கர வெடிச்சத்தம்..! அலறியடித்து திரண்ட பொதுமக்கள்.. வேலூரில் பரபரப்பு..!

By Manikandan S R S  |  First Published Sep 25, 2019, 3:38 PM IST

ஆற்காட்டில் இருக்கும் ஒரு வீட்டில் அதிகாலை நேரத்தில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் இருக்கும் சாய்பாபா நகரைச் சேர்ந்தவர் தனசேகர்(62). இவரது மனைவி இளவேணி(55). தனசேகர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் செயற்பொறியாளர் ஆக பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார். இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

Latest Videos

undefined

அதிகாலை 3 மணி அளவில் வீட்டின் தரைதளத்தில் பயங்கர வெடிச் சத்தம் கேட்டிருக்கிறது. இதனால் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்து எழுந்தனர். அப்போது வீட்டின் தரைதளத்தில் இருந்த  கதவு மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து கிடந்தன. வீட்டின் முன்பக்க மற்றும் பின்பக்க க்ரில் கேட்கள் பெயர்த்து வீசப்பட்டு இருந்தது. வீட்டிலிருந்த டிவி மற்றும் சோபா ஆகியவை தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தன. வீட்டின் சுவர்களில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் இருந்தது.

இதை பார்த்ததும் செய்வதறியாது திகைத்த அவர்கள் பின்னர் தீயை அணைத்தனர்.  அதே போல அவர்களது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஓய்வு பெற்ற மின்வாரிய பொறியாளர் ரகுபதி(59) என்பவரின் வீட்டின் சுவரிலும் விரிசல் ஏற்பட்டிருந்தது. அந்த வீட்டிலும் ஜன்னல் மற்றும் கண்ணாடிகள் நொறுங்கி கிடந்தன. இதனிடையே இந்த வெடி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து அவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த ஆற்காடு டவுண் காவல் துறையினர் வெடிகுண்டு ஏதும் வெடித்திருக்குமோ? என சந்தேகித்தனர். இதன்காரணமாக வேலூரிலிருந்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. ஆனால் வெடிகுண்டு வெடித்ததற்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. 

இதையடுத்து வீட்டின் மற்ற பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. குளியலறையில் பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு விபத்து நிகழ்ந்திருக்கலாம் என காவல்துறை தரப்பில் கணிக்கப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்திற்கான காரணம் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகாலை நேரத்தில் கேட்ட பயங்கர வெடிச் சத்தத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

click me!