அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து மாநிலத்தின் பல மாவட்டங்களிலும் மழை கொட்டித் தீர்த்தது. இதன்காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்தது.முக்கிய அணைகள் பல நிரம்பி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை நிறைவடையும் தருவாயில் தற்போது மீண்டும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
undefined
ஜனவரி 5 ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் பருவ மழை தொடரும் என வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன்படி சென்னை,காஞ்சிபுரம், வேலூர் உட்பட பல இடங்களில் பரவலாக மழை பெய்துவருகிறது. இதனிடையே அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஸ்ரீபெரும்புதூரில் 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.