தனியார் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து: 8 மணி நேரம் போராடிய வீரர்கள்

By Dinesh TG  |  First Published Sep 27, 2022, 3:24 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே இயங்கி வந்த தனியார் காலணி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை 8 மணி நேரம் போராடி 13 தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தி வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர்.


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்னவரிகம் பகுதியில் பரிதா குழுமத்திற்கு சொந்தமான (பரிதா ஷூ பிரைவேட் லிமிடெட் பாம்ஸ் யூனிட்) காலணி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் 2வது ஷிப்ட் பணியின் போது திடீரென தொழிற்சாலையின் பின்புறம் உள்ள சேமிப்புக் கிடங்கில் இருந்து கரும்புகையுடன் தீ பற்றி எரியத் தொடங்கியது.

இதனை அறிந்த தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலை நிர்வாகிகள் உடனடியாக பணியாளர்களை வெளியேற்றிவிட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், காலணி தயாரிக்கும் தொழிற்சாலை என்பதால் தீ மலமலவென பிற பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது.

Latest Videos

சென்னை மெட்ரோ பணியின் போது பயங்கரம்.. கிரேன் கவிழ்ந்து.. பேருந்து மீது விழுந்த கம்பி.. 3 பேர் படுகாயம்..!

இதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 13 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு சுமார் 8 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த மூலப்பொருட்கள், உதிரி பாகங்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. இந்த விபத்தால் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

விபத்து குறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் ஆகியோர் ஆலைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் சதிவேலை காரணமாக விபத்து ஏற்பட்டதா என காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிமுகவை அழிக்க சங்பரிவார்கள் முயற்சி...! எச்சரிக்கையாக இருக்க திருமாவளவன் அட்வைஸ்
 

click me!