Loksabha Elections 2024 அனல் பறக்கும் வேலூர் தேர்தல் களம்: முந்தப்போவது யார்?

By Manikanda Prabu  |  First Published Apr 7, 2024, 4:09 PM IST

மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு நெருங்கிவரும் நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதியின் கள நிலவரம் எப்படி உள்ளது என தெரிந்து கொள்ளலாம்


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஒரே கட்டமான ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த கட்சிகள் தலைமையில் தனித்தனியாக கூட்டணி அமைக்கப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சியும் தனித்து களம் காண்கிறது.

அதன்படி, வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பாக சிட்டிங் எம்.பி. கதிர் ஆனந்த், பாஜக சார்பில் கூட்டணி கட்சியான புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம், அதிமுக சார்பில் மருத்துவர் பசுபதி,  நாம் தமிழர் கட்சி சார்பில் மகேஷ் ஆனந்த் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஏ.சி.சண்முகம் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

Latest Videos

வேலூர் மக்களவைத் தொகுதியில், வேலூர், அனைக்கட்டு, கீழ்வைத்தினாங்குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய இரண்டு தொகுகள் திருப்பத்தூர் மாவட்டத்திலும், மற்ற 4 தொகுதிகள் வேலூர் மாவட்டத்திலும் உள்ளன. வேலூர் மக்களவைத் தொகுதியை பொறுத்தவரை 1951ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 6 முறையும், திமுக 6 முறையும், அதிமுக 2 முறையும், பாமக 2 முறையும், காமல்ன் வீல் கட்சி ஒருமுறையும், சுயேச்சை ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளது.

மக்களவைத் தேர்தல் 2024: திருச்சி தொகுதி - கள நிலவரம் என்ன?

கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். முன்னதாக, பணப்பட்டுவாடா புகாரில் வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. தொடர்ந்து, அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகனும் வேட்பாளருமான கதிர் ஆனந்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

அதன்பின்னர், நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் 47.21 சதவிகிதம் வாக்கு சதவீதத்துடன் 485,340 வாக்குகள் பெற்று அவர் வெற்றி பெற்றார். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட புதிய நீதிக் கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் 46.42 சதவிகிதம் வாக்கு சதவீதத்துடன் 4,77,199 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தீபலட்சுமி 26,995 வாக்குகளை பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார்.

வேலூர் தொகுதியின் தற்போதைய கள நிலவரம், திமுக, அதிமுக, பாஜக என மும்முனை போட்டி நிலவுவதாகவே உள்ளது. இந்த தொகுதியில் பாஜகவுக்கு வாக்கு வங்கி இல்லை என்றாலும், ஏ.சி.சண்முகத்துக்கு தனிப்பட்ட செல்வாக்கு இருப்பதால், இந்த தொகுதியில் மும்முனை போட்டி நிலவுகிறது. இல்லையென்றால், கள நிலவரம் திமுக vs அதிமுக என்றே இருக்கும்.

பாஜக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட கூட்டணி முறிவானது, குறிப்பாக வேலூர் தொகுதியில் இரு கட்சிகளுக்குமே பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பண பலம், தனிநபர் செல்வாக்கு உள்ளிட்டவை பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு பலமாக பார்க்கப்படுகிறது. இந்த காரணி கணிசமாக வாக்கு வங்கி வைத்திருக்கும் அதிமுகவின் வாக்குகள் பிரிக்க வாய்ப்புள்ளது. இது இரு கட்சிகளுக்குமே சிக்கலை ஏற்படுத்தும்.

கடந்த 2019 தேர்தலில் அதிமுக, பாஜக இரு கட்சிகள் கூட்டணியில் இருந்துமே ஏ.சி.சண்முகம் இரண்டாம் இடம்தான் பிடித்தார். எனவே, எதிர்வரவுள்ள 2024 தேர்தலில் கூட்டணி முறிவால் அதிமுகவின் வாக்குகள் ஏ.சி.சண்முகத்திற்கு விழுவதற்கு வாய்ப்பில்லை. ஏ.சி.சண்முகத்தின் தனிப்பட்ட செல்வாக்கு அதிமுகவுக்கு பலன் அளிக்காது என்பதால், இரு கட்சிகளுக்குமே கூட்டணி முறிவு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மக்களவைத் தேர்தல் 2024: மதுரை தொகுதி - கள நிலவரம் என்ன?

ஏற்கனவே பல்வேறு கட்சிகளின் சார்பில் கூட்டணியில் போட்டியிட்டுள்ள ஏ.சி.சண்முகம் இந்த தேர்தல்தான் தனது கடைசி தேர்தல் என கூறியுள்ளார். 2014, 2019 தேர்தல்களில் இரண்டாம் இடம் பிடித்து தோல்வியுற்றதால் ஏற்பட்டுள்ள அனுதாபம், தொகுதியில் நலத்திட்ட உதவிகளை செய்து வருவதும் அவருக்கு பலமாக பார்க்கப்படுகிறது. ஆனால், இது எந்த அளவுக்கு தேர்தலில் கை கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அதிமுகவை பொறுத்தவரை பாஜக கூட்டணியில் இருந்து விலகியது அக்கட்சிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. ஆனால், அதிமுக, பாஜக ஆகிய எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் அது பாஜகவுக்கு ஆதரவாகத்தான் இருக்கும், சிறுபான்மையினர் வாக்குகளை பிரிக்கவே பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியுள்ளது ஆகிய பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. வேட்பாளர் பசுபதி தொகுதிக்கு பெரிதாக அறிமுகம் இல்லாதவர். இது அக்கட்சிக்கு சறுக்கலை ஏற்படுத்தும் என தெரிகிறது.

அதேசமயம், சிட்டிங் எம்.பி.யான கதிர் ஆனந்த் திமுக சார்பாக மீண்டும் வேலூர் தொகுதியில் களமிறங்குவது இந்தியா கூட்டணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. சிட்டிங் எம்.பி.யான கதிர் ஆனந்த் வேலூர் தொகுதிக்கு ஏராளமான நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார். தொகுதி முழுவதும் ஏராளமான பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. சிறுபான்மையினர் வாக்குகள், கூட்டணி பலம் உள்ளிட்டவைகள் கதிர் ஆனந்திற்கு ப்ளஸாக பார்க்கப்படுகிறது. வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்த் நன்கு அறியப்பட்டவர். இதனால், வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்த் மீண்டும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த ஆருடங்கள் மெய்யாகுமா என்பதை ஜூன் 4 தேர்தல் முடிவுகள் சொல்லிவிடும்.

click me!