எட்டு வயது சிறுவன் தொடர்ந்து ஒரு மணி நேரம் ஒரு கையில் கிட்டார் வாசித்தும், ஒரு கையில் வாள் சுற்றியும் உலக சாதனை படைத்துள்ளான். சிறுவனின் சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
திருச்சியைச் சேர்ந்த செந்தில்குமாரன் - மங்களபிரியா தம்பதியின் மகன் ரித்விக் ஸ்ரீஹரன். எட்டு வயது சிறுவனான ரித்விக் அருகில் உள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். படிப்பு மட்டுமில்லாது கிட்டார் இசைப்பது மற்றும் சிலம்பம் சுற்றுவதில் ஆர்வம் கொண்டவராக ரித்விக் இருந்துள்ளான். சிறுவனின் திறமையை பார்த்த பெற்றோர் அவனை ஊக்குவித்து உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
undefined
இந்தநிலையில் சென்னையில் உள்ள தனியார் ஸ்போட்ஸ் அகாடமியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் ஒரு கையில் கிடார் இசைத்துக் கொண்டும், ஒரு கையில் வாள் வீசிய படி தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் செய்து உலக சாதனை படைத்துள்ளான் சிறுவன் ரித்விக். ரித்விக்ன் சாதனையை நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் உலக சாதனையாக பதிவு செய்துள்ளது.
மேலும் சிறுவனைப் பாராட்டி சான்றிதழ்கள், பதக்கம் மற்றும் கோப்பைகளும் வழங்கப்பட்டுள்ளன. உலக சாதனை படைத்த சிறுவனை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். உலக சாதனை படைத்த சிறுவன் கூறியதாவது, கடந்த ஆறு மாதங்களாக ஒரு கையில் கிட்டார் வாசிக்கவும், ஒரு கையில் வாளை சுழற்றவும் பயிற்சி எடுத்ததாக தெரிவித்துள்ளார்.
உலக சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கில் ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக வாள் வீசியும் மற்றும் கிட்டாரை இசைத்தும் சாதனை படைத்ததாக சிறுவன் தெரிவித்துள்ளார். தனது சாதனைக்கு உறுதுணையாக இருந்து ஊக்கப்படுத்திய பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.