தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தமிழக காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் கொல்லப்பட்ட நிலையில், இச்சம்பவத்தின் 6ம் ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
தென்தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டத்தில் வேதாந்தா குழுமத்திற்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் காப்பர் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டு வந்தது. மேலும் இங்கு தயாரிக்கப்படும் காப்பர் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால், இந்த நிறுவனத்தில் இருந்து வெளிவரும் நச்சு புகையால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர்.
தொடர்ந்து இந்நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு எதிராக பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்ட போதிலும் நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. ஆனால் நிறுவனத்தில் இருந்து கிடைக்கக் கூடிய லாபத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்ட மத்திய, மாநில அரசுகளும், வேதாந்தா குழுமமும் தொடர்ந்து ஆலையை எவ்வித இடையூறுமின்றி நடத்தி வந்தது.
undefined
இந்த ஆலைக்கு எதிராக பல ஆண்டுகளாக தூத்துக்குடி மக்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் அவர்களின் குரலுக்கு மத்திய அரசும், மாநில அரசும் செவி சாய்க்கவில்லை. மாறாக ஆலையை விரிவாக்கம் செய்யும் பணியில் ஆலை நிர்வாகம் ஈடுபட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நிறுவனத்திற்கு எதிராக தொடர் போராட்டத்தை கையில் எடுத்து அறவழியில் தொடர்ந்து போராடி வந்தனர். போராட்டம் 100வது நாளை எட்டிய நிலையில் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க ஊர்வலமாகச் சென்றனர்.
அந்த நேரத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் இல்லை என்று சொல்லப்பட்டது. ஆட்சியர் அலுவலகம் அருகே ஆயிரக்கணக்கானோர் கூடியதால் பொறுமையிழந்த காவல் துறை, தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்துவிடலாம் என்று எண்ணி தடியடியை மேற்கொண்டனர். இதனால் பொறுமை இழந்த பொதுமக்களும் காவல் துறையினருக்கு எதிராக கற்களை வீசி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் செல்வதை பார்த்து என்னசெய்வதென்று தெரியாமல் திணறிய காவல் துறையோ இறுதியாக தங்கள் கையில் இருந்த உச்சபட்ச அதிகாரத்தை பயன்படுத்தியது.
வைகாசி விசாகப் பெருவிழா; கந்தனை காண திருச்செந்தூரில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
அதன்படி காவல் துறை வாகனங்கள் மீது ஏறிக் கொண்டு கண்மூடத்தனமாக போராட்டக்காரர்களை நோக்கி சுடத் தொடங்கினர். இதனால் பொதுமக்கள் அங்கும் இங்கும் தெறித்து ஓடிய நிலையில், பொதுமக்கள் தரப்பில் 15 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். ஆனால், அப்போது பொறுப்பில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டதாக அலட்சியமாக பதில் அளித்தார்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் தனது விசாரணை அறிக்கையில் அப்போதைய மாவட்ட ஆட்சியர், தென்மண்டல ஐஜி சைலேஷ் குமார் உள்பட 17 பேர் மீது நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துறை செய்தது.
இதனிடையே இச்சம்பவம் நடைபெற்ற 6ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழக அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் புகைப்படத்திற்கு அமைச்சர் கீதா ஜீவன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.