தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஆட்சியராக இருந்த வெங்கடேஷ் உட்பட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க அருணா ஜெயதீசன் ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஆட்சியராக இருந்த வெங்கடேஷ் உட்பட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க அருணா ஜெயதீசன் ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கடந்த 2018ம் ஆண்டு 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தின் 100வது நாளில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பிரம்மாண்ட பேரணியை பொதுமக்கள் நடத்தினர். ஆட்சியர் அலுவலகத்தை அடைந்த போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி போராட்டக்கார்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, வன்முறை குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அப்போதைய அதிமுக அரசு ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டது.
undefined
இந்த ஆணையம் 2018-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி தனது விசாரணையை தொடங்கியது. 4 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்ற விசாரணை, சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து விசாரணை அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் நீதிபதி அருணா ஜெகதீசன் குழு சமர்பித்தது. அதில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டோரை தொலைவில் இருந்து குறிபார்த்து சுடக்கூடிய துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டது பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. குண்டுகள் பின் தலை வழியே ஊடுருவி நெற்றி வழியாக வெளியே வந்ததன் மூலம், பின்னால் இருந்து சுட்டது தெரியவந்துள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட 13 பேரில் 6 பேர் பின் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தடியடி, கண்ணீர் புகைவீச்சு, வானத்தை நோக்கி சுடுதல் போன்ற எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் காவல்துறையினர் மேற்கொள்ளவில்லை.
போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் எந்தவொரு காவல்துறையைச் சேர்ந்த யாரும் படுகாயம் அடையவில்லை. போராட்டம் தொடர்பான உளவுத்துறை தகவல் முன்கூட்டியே கிடைத்தும் அதற்குத் தகுதியான முக்கியத்துவம் கொடுத்து அப்போதைய ஐஜி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட தகவலே காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரியாமல் வைக்கப்பட்டிருந்ததாகவும், உரிய உத்தரவுகள் இன்றியே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டின் போது காவலர் சுடலைக்கண்ணு மட்டும் 17 ரவுண்டுகள் சுட்டுள்ளார். தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம், 3ம் மைல், எஃப்சிஐ ரவுண்டானா, திரேஸ்புறம் போன்ற இடங்களில் சுடலைக்கண்ணு சுட்டுள்ளார். ஒரே போலீசார் மட்டும் 4 இடங்களில் சுட்டதன் மூலம் அவரை அடியாள் போல காவல்துறை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. எஃப்சிஐ ரவுண்டானா அருகே சுடலைக்கண்ணு சுட்டபோது எஸ்.பி. மகேந்திரன், எஸ்.பி. அருண்சக்தி குமார் உடனிருந்தனர். போராட்டத்தை கையாள்வதில் ஆட்சியர் வெங்கடேஷ் தொடக்கம் முதலே அலட்சியம் காட்டி வந்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 17 காவல்துறையினர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 2018 ஆல் தென்மண்டல ஐ.ஜி.ஆக இருந்த சைலேஷ்குமார் யாதவ், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி ஆக இருந்த கபில்குமார் சர்கார், தூத்துக்குடி எஸ்.பி.யாக இருந்த பி.மகேந்திரன், டி.எஸ்.பி. லிங்கதிருமாறன், 3 ஆய்வாளர்கள், 2 எஸ்.ஐ., ஒரு தலைமை காவலர், 7 காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.