Kanimozhi: சீனாவை எதிர்த்து கேள்வி கேட்க மோடிக்குத் தைரியம் இல்லை - கனிமொழி காரசார பேச்சு

By Velmurugan sFirst Published Apr 15, 2024, 7:47 PM IST
Highlights

நம் நாட்டு எல்லையை அத்துமீறி ஆக்கிரமிக்கும் சீனாவை எதிர்த்து கேள்வி கேட்க தைரியம் இல்லாத பிரதமர் மோடி, விவசாயிகளை கேள்வி கேட்க விடாமல் அடக்குமுறையை நிகழ்த்துவதாக கனிமொழி குற்றம் சாட்டினார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி இன்று ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கூட்டாம்புளி பகுதியில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், வருகின்ற 19ம் தேதி அன்று நாம் அனைவரும் எந்த காரணமும் சொல்லாமல் வாக்கு சாவடிக்குச் சென்று வாக்களிக்க வேண்டும். அனைவரையும் கூட்டிச் சென்று ஓட்டுப் போட வைப்பது நம்முடைய கடமை. இந்த தேர்தல் என்பது மற்ற தேர்தல் மாதிரி இல்லை. இந்த நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதா? இல்லை சர்வாதிகாரத்திற்கு விட்டுவிடுவதா என்பதை முடிவு செய்யக்கூடிய தேர்தல்.

தற்போது கொஞ்சம் பேச்சுரிமை இருக்கிறது, ஓட்டு உரிமை இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் சர்வாதிகாரம் முழுவதும் வந்துவிட்டால் யாருக்கும் பேச்சுரிமை இருக்காது. ஓட்டு உரிமை இருக்காது. அப்படிப்பட்ட ஒரு நிலைமையை மோடி கொண்டு வருவார். யாரும் அவரை எதிர்த்துப் பேசினால் அவருக்குப் பிடிக்காது. இருக்கக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர்கள் பலபேர் சிறையில் இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் பாஜகவில் சேரவில்லை என்ற காரணத்தினால். இதற்குப் பயந்து சில பேர் பாஜகவில் சேர்ந்தனர், அவர்களை உடனே பாஜகவின் வாஷிங்மெஷினில் போட்டுத் துவைத்து சுத்தமாக்கி விடுகின்றனர். எதிர்க்கட்சியில் இருந்தால் சிறைக்குப் போகவேண்டிய நிலை உருவாகும்.

“இந்த விவகாரத்தில் மோடி பேராசிரியர், நாங்கள் கத்துகுட்டி தான்” பாஜகவின் தேர்தல் யுக்தி குறித்து சிதம்பரம் ஓபன் டாக்

விவசாயிகள்  அடிப்படை ஆதார விலை வேண்டும் என்று போராடினார்கள், விவசாயிகள் என்ன தீவிரவாதிகளா? அவர்களை டெல்லிக்கு உள்ளே வந்து விடக்கூடாது என்று  ட்ரோனை வைத்து அதில் கண்ணீர்ப் புகைக் குண்டு வீசினார்கள். அதையும் தாண்டி ஆணி பதித்த சாலை, பெரிய முள்வேலிகள், சிமெண்ட் வேலி, இதெல்லாம் அமைத்து விவசாயிகளைத் தடுக்கிறார்கள். ஆனால் சீனா இந்தியாவிற்குள் வந்து கொண்டே இருக்கிறது. நம்முடைய இடத்தை பிடித்து, கிராமங்களை அமைத்து அதற்குச் சீன மொழியில் பெயர் வைத்து விடுகிறார்கள். அவர்களை எதிர்த்து கேள்வி கேட்க மோடிக்குத் தைரியம் இல்லை. 

பாஜக தன்னுடைய அரசியல் லாபத்திற்காக ஜாதி, மதம் என்று சொல்லி மக்களைப் பிரித்து, அதில் கலவரத்தை உருவாக்குகின்றனர். குஜராத்தில் மோடி முதலமைச்சராக இருந்தபோது மிகப்பெரிய கலவரம் நடைபெற்றது. மணிப்பூரில் கடந்த ஒரு வருடமாகக் கலவரம், அங்கே பெண்கள் எல்லாம் மோசமாக நடத்தப்பட்டார்கள் என்று அனைவருக்கும் தெரியும். மணிப்பூர் சென்று அங்கிருக்கக் கூடிய மக்களைச் சந்தித்து மோடி ஆறுதல் கூறினாரா? இல்லை.

பூத் கமிட்டிக்கு கூட ஆள் இல்லாத பாஜக கோவை தொகுதியில் எப்படி வெற்றி பெறும்? வேலுமணி கேள்வி

காங்கிரஸ் தேர்தல் அறிகையில் ஏழ்மையில் இருக்கக்கூடிய ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். இதையெல்லாம் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். வாக்குச் சாவடியில் முதல் பெட்டி, முதல் சின்னம், முதல் பெயர், அது நம்முடைய உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து எனக்கு வெற்றி பெறக்கூடிய வாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும் என்று பேசினார்.

click me!