காவலர்கள் இறந்தால் இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதில்லை. வழக்குகள், சம்பவங்களின் வேறுபாடு அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படுகிறது என டிஜிபி திரிபாதி கூறியுள்ளார்.
காவலர்கள் இறந்தால் இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதில்லை. வழக்குகள், சம்பவங்களின் வேறுபாடு அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படுகிறது என டிஜிபி திரிபாதி கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே குற்றவாளிகளை பிடிக்க சென்றபோது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதில், தலையில் வெடிகுண்டு வெடித்ததில், காவலர் சுப்பிரமணியன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில், துரைமுத்துவும் வெடிகுண்டு வெடித்ததில் உயிரிழந்தார். இந்த சம்பவம் போலீசார் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும்’ எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் படத்துக்கு நெல்லை சரக டிஐஜி அலுவலகத்தில் தமிழக டிஜிபி திரிபாதி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திரிபாதி;- நாட்டு வெடிகுண்டு வீசிக் கொலை செய்யப்பட்ட காவலர் சுப்பிரமணியனின் குடும்பத்துக்கு காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, காவல்துறை சார்பிலும் உதவிகள் வழங்கப்படும் என்றார். காவலர்கள் இறந்தால் இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதில்லை. வழக்குகள், சம்பவங்களின் வேறுபாடு அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படுகிறது என விளக்கமளித்தார்.
மேலும், பேசிய அவர் போலீசாருக்கு பாதுகாப்பு இல்லாமல் இல்லை. எதிர்பாராத விதமாக நடைபெற்றது. அதனால் போலீசாருக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூற முடியாது. ஒரு சில சம்பவங்களை வைத்து தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் அதிகரிப்பு என்று கூறக்கூடாது. எங்கள் குடும்பத்தில் இதுபோன்று ஒரு சம்பவம் நடைபெற்று விட்டது. போலீசார் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பது எனக்கு தெரியும். குறை சொல்பவர்கள் சொல்லத்தான் செய்வார்கள். நாம் நமது வேலையை செய்வோம். போலீசாருக்கு தகுந்த பாதுகாப்பு இருக்கிறது. இன்னும் பாதுகாப்பு பயிற்சிகளை அதிகரிக்க வேண்டும் என்றார்.
இறந்த காவலரின் உடலில் நாட்டு வெடிகுண்டுகளிலிருந்து வெளியேறிய ஆணிகள் இருக்கின்றனவா என்பது பற்றி உடற்கூறாய்வு முடிவு வெளிவந்த பின்னரே தெரியவரும். குற்றவாளிகள் பயன்படுத்தும் ஆயுதங்கள் நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படுவதாகத் தெரியவந்தால், அதைச் சமாளிக்கும் வகையில் அதைவிடவும் கூடுதல் தொழில்நுட்பத்தைக் காவல்துறையினர் பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.