மனைவி பிரிந்து சென்றதால் மன உளைச்சலில் இருந்த கணவன் வீட்டை அடித்து நொறுக்கி, வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் மேலக்காலனி பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் காளிராஜ் (வயது 30). இவர் அப்பகுதியில் உள்ள குச்சி தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். காளிராஜிக்கு திருமணமாகி சுந்தரி என்ற மனைவியும், 1 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்த காளிராஜ் திடீரென வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்துள்ளார். அவர் வெளியே வந்த சில நிமிடங்களில் அவரது வீட்டில் திடீரென தீ பற்றி எரிந்து, அதிகளவு புகை எழுந்துள்ளது. இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
undefined
தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருந்த போதிலும் வீட்டில் இருந்த பீரோ, துணிகள், வீட்டு உபயோக பொருட்கள் முற்றிலுமாக இருந்து எரிந்து சேதமானது. இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் காளிராஜிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரது மனைவி சுந்தரி குடும்ப பிரச்சினை காரணமாக கோபித்துக் கொண்டு தனது குழந்தையுடன், அயன் வடமலாபுரத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டதாகவும், இதனால் மன வேதனையில் இருந்த காளிராஜ், மது போதையில் தனது வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி, அவர் தீ வைத்தது தெரியவந்தது.