தூத்துக்குடியில் முட்டை வியாபாரியின் மனைவியிடம் ரூ.4 லட்சம் மதிப்பில் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 நபர்களை கைது செய்த காவல் துறையினர் அவர்களிடம் இருந்து நகைகளை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புத்தூர், வி.பி. சிந்தன் நகரைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் நாமக்கல்லில் இருந்து லாரியில் முட்டைகளை மொத்தமாக கொள்முதல் செய்து கோவில்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள கடைகளில் சில்லறை விற்பனைக்காக விநியோகிப்பது வழக்கம். வீட்டிலும் ராமசாமியின் மனைவி முத்துமாரியம்மாளிடம் (55) பொதுமக்கள் முட்டைகளை வாங்கிச் செல்வர்.
கடந்த ஜனவரி 14ம் தேதி இரவு 7 மணிக்கு பேன்ட், சட்டை, மாஸ்க் அணிந்த வாலிபர் ஒருவர் முட்டை வாங்க ராமசாமியின் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர், கடைகளுக்கு முட்டைகளை விநியோகிக்க சென்றிருந்தார். வீட்டில் இருந்த முத்துமாரியம்மாளிடம் 5 முட்டைகள் தனியாகவும், 3 முட்டைகள் தனியாகவும் என 2 பார்சல்களில் அந்த நபர் முட்டை வாங்கினார். பின்னர் தாகமாக இருக்கிறது, தண்ணீர் தாருங்கள் என்று கேட்டுள்ளார்.
undefined
திருப்பூர் நெடுஞ்சாலையில் போதையில் ரகளை செய்த இளைஞர்; உடல் பாகங்கள் சிதைந்து உயிரிழப்பு
இதையடுத்து தண்ணீர் எடுத்து வர முத்துமாரியம்மாள் வீட்டுக்குள் சென்ற போது, அவரது பின்னாலேயே சென்ற அந்த நபர், திடீரென்று அவரை கீழே தள்ளி, அவரது கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் நகையை பறித்தார். முத்துமாரியம்மாள் கூச்சலிடவே, கத்தினால் குத்திக் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி விட்டு தப்பியோடி விட்டார். பறிக்கப்பட்ட நகையின் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.
இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் காவல் நிலையத்தில் முத்துமாரியம்மாள் புகார் செய்தார். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வானரமுட்டி கண்மாய் பகுதியில் 3 மர்மநபர்கள் பதுங்கியிருப்பதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் துறையினர் அங்கு சென்றனர். அப்போது காவல் துறையினரை பார்த்ததும் 3 பேரும் தப்பியோட முயன்றனர்.
சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை - அமைச்சர் உதயநிதி அதிரடி
காவல் துறையினர் அவர்களை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள், நாலாட்டின்புத்தூர் வி.பி.சிந்தன் நகரைச் சேர்ந்த மாரியப்பன் (23), காப்புலிங்கம்பட்டி மகாராஜன் (32), நாகப்பட்டினத்தை சேர்ந்த பாஸ்கரன் (32) என்பதும், முட்டை வியாபாரி மனைவி முத்துமாரியம்மாளிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரிய வந்தது. மேலும் முத்துமாரியம்மாளிடம் மாரியப்பன் நகையை பறிக்கும்போது மற்ற இருவரும் ஆட்கள் யாரும் வருகிறார்களா? என்று நோட்டமிட்டதும் காவல் துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து நகையை பறிமுதல் செய்தனர்.