கூத்தாண்டவர் திருவிழா கடந்த மாதம் 14ம் தேதி மகாபாரத சொற்பொழிவுடன் தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் அமைந்துள்ளது கூத்தாண்டவர் திருக்கோயில். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் கூத்தாண்டவர் திருவிழா 20 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழாவின் நிறைவு நிகழ்வான தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் திருநங்கைகள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
விழாவில், திருநங்கைகள் நடனமாடி கூத்தாண்டவரை வழிபட்டனர். கூத்தாண்டவர் திருவிழாவிற்காக திருவண்ணாமலை, சென்னை, மும்பை, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து நூற்றுக்கணக்கான திருநங்கைகள் கலந்துகொண்டு தாலி கட்டுதல், நடன போட்டி, அழகுப் போட்டி உள்ளிட்டவற்றில் பங்கேற்று சிறப்பித்தனர்.
நிறைவு நாளான தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் வேடந்தவாடி, மங்கலம், அவலூர்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தும், கிடாய் வெட்டி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
இந்த தேர் திருவிழாவில் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.