80 ஆண்டுகளுக்குப் பின் பட்டியலின மக்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி

By SG BalanFirst Published Jan 30, 2023, 3:43 PM IST
Highlights

திருவண்ணாமலை மாவட்டத்தில் 80 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக அந்த ஊரைச் சேர்ந்த பட்டியலின மக்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த தென்முடியனூரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. 80 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோவிலில் தலித் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் நுழைய பிற சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தடை விதித்திருந்தனர். இந்த கோவில் தற்போது அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குள் வந்திருக்கிறது.

அந்த ஊரைச் சேர்ந்த தலித் மக்கள் தங்களை முத்துமாரியம்மன் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டி மாவட்ட கலெக்டர் முருகேஷிடம் மனு அளித்துள்ளனர். இந்நிலையில், இன்று காவல்துறையினர் துணையுடன் தலித் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், பிற சமூகங்களைச் சேர்ந்தவர்கள் கோவிலுக்கு பூட்டு போட்டு பட்டியலின மக்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். பட்டியலின மக்களுக்காக தனியே வேறு கோயில் கட்டிக் கொடுத்திருப்பதாகவும் அவர்கள் அங்கு சென்று வழிபாடு செய்யட்டும் என்றும் அவர்கள் கூறினர்.

பழனி முருகன் கோவிலில் கருவறைக்குள் நுழைந்த மர்ம நபர்கள்; வாக்குவாத்தில் பக்தர்கள்

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சூழ்நிலையைச் சமாளிக்க நூற்றுக்கணக்கான காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். காவல்துறையினர் சார்பில் இருதரப்பினருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருந்தாலும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கோயிலுக்குள் நுழைய ஆட்சேபனை தெரிவித்துவந்தனர்.

இந்நிலையில், கலெக்டர் முருகேஷ் அங்கு வந்து, கோயில் பூட்டை உடைத்து பட்டியலின மக்களை உள்ளே அழைத்துச் சென்றார். இதனால் அந்த ஊரைச் சேர்ந்த சுமார் 200 தலித் மக்கள் 80 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக முத்துமாரியம்மன் கோயிலில் தரிசனம் செய்தனர்.

“இவ்வளவு காலமாக நாங்கள் கோயிலுக்கு வெளியேதான் நிற்க வைக்கப்பட்டோம். முத்துமாரியம்மனுக்குப் பொங்கல் வைத்து வழிபாடு செய்யவேண்டும் என்ற கனவு இன்று நிறைவேறிவிட்டது என்று” தலித் சமூகத்தைச் சேர்ந்த விஜயா என்பவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். “இதே ஊரில் பிறந்து வளர்ந்தவர்களை கோயிலுக்குள் போகக் கூடாது என்று தடை செய்திருந்தனர். இதேபோல எப்போதும் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்” என்று கோமதி கூறினார்.

100 ஆண்டு கால கோயிலை இடித்ததாக பேசினாரா டி.ஆர்.பாலு? அண்ணாமலையின் வீடியோவிற்க்கு பதிலடி கொடுக்கும் திமுக

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட் ஆட்சியர் முருகேஷ், “அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்கள் அனைத்து சமுதாய மக்களுக்கும் பொதுவானவை. அவற்றை எந்தவொரு சமூகமும் உரிமை கொண்டாட முடியாது. பட்டியலின மக்கள் கோயிலுக்குள் சென்று வழிபடுவதைத் தடுக்கக் கூடாது” என்று அறிவுறுத்தினார்.

“இன்று ஒருநாள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டதோடு நின்றுவிடாமல், இதே நிலை தொடர நாங்கள் ஊர் மக்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடர்வோம்” என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உறுதி அளித்துள்ளார்.

தமிழகத்தில் பொதுத்தேர்வு தேதிகள் மாற்றம்; அமைச்சர் மகேஷ் அறிவிப்பு

click me!