திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்காக, டிசம்பர் 8 முதல் 16 வரை 156 பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணிக்காக வரும் காவலர்களின் தங்குமிடத்திற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு அந்த மாவட்டத்தில் உள்ள 156 பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ளார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெறும் காா்த்திகை தீபத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று அதிகாலை 4 மணி அளவில் அருணாசலேஸ்வரர் கோயில் மூலவர் சந்நிதியில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள மலைமீது மகா தீபம் ஏற்றப்படும்.
கார்த்திகை மகா தீபத்தைக் காண சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்குத் தேவையான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
இந்நிலையில் திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அந்த மாவட்டத்தில் உள்ள 156 பள்ளிகளுக்கு டிசம்பர் 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதிவரை 9 நாட்கள் விடுமுறை அளிப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். தீபத் திருவிழா பாதுகாப்புப் பணிக்காக பிற மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் காவலர்கள் இந்தப் பள்ளிகளில் தங்க உள்ளனர் என்பதால் இந்த விடுமுறை அறிவிக்கப்படுகிறது என்றும் முதன்மைக் கல்வி அலுவலர் கூறியுள்ளார்.