கூடங்குளம் அணுமின் நிலைய வளாக மையத்தில் நாளை நடைபெற இருந்த அணுமின் நிலைய பணியாளர்கள் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் செயல்படும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு தேவைப்படும் C பிரிவு பணியாளர்களை தேர்வு செய்ய 2018 ஆம் ஆண்டு அறிவிப்பு கொடுக்கப்பட்ட நிலையில் அந்தப் பணிகளுக்கான எழுத்து தேர்வு நாளை நடைபெற இருந்தது. இந்த நிலையில் சபாநாயகர் அப்பாவு நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில் 1999ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு நிலம் கொடுத்த மக்கள் மற்றும் உள்ளூர் பகுதி மக்களுக்கு C பிரிவில் எழுத்து தேர்வு இல்லாமல் வேலை வாய்ப்பு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும், நாளை நடைபெற உள்ள எழுத்து தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அணுசக்தி துறை செயலாளருக்கு கோரிக்கை விடுத்தார்.
ஆனால் சபாநாயகர் அப்பாவுவின் கோரிக்கையை ஏற்காமல் நாளை நடைபெற உள்ள எழுத்து தேர்வுக்கான ஆயத்த பணிகளை கூடங்குளம் அணுமின் நிர்வாகம் செயல்படுத்தி வருவதை அறிந்த மாவட்ட ஊராட்சி தலைவர் விஎஸ்ஆர் ஜெகதீஷ் தலைமையில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அலெக்ஸ், அப்பாவு முன்னிலையில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் மதியம் கூடங்குளத்தில் உள்ள அணுசங்கமம் மகாலில் வைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
கூட்டத்தில் 1999 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி தேர்வு முறை இல்லாமல் அணுமின் நிலைய C பிரிவு பணிக்கான வேலைவாய்ப்பை அணுமின் நிலையத்திற்கு நிலம் கொடுத்த மக்கள் மற்றும் உள்ளூர் பகுதி இளைஞர்களுக்கு வழங்க வேண்டும். நாளை நடைபெறும் எழுத்து தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கூடங்குளம் அணுமின் நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இந்த கோரிக்கையினை அணுமின் நிர்வாகம் ஏற்காவிட்டால் நாளை அணுமின் தேர்வு வளாகம் முன்பு முற்றுகை போராட்டம் செய்யப்படும் என மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் அறிவித்து இருந்தார்.
மதுபோதையில் விமான நிலையத்தில் அலப்பறை செய்த வேல்முருகன்; சுத்துபோட்ட அதிகாரிகள்
போராட்ட அறிவிப்பை தொடர்ந்து இன்று மாலை ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வைத்து சமாதான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சேரன்மகாதேவி சார ஆட்சியர் அர்பித் ஜெயின், வள்ளியூர் டிஎஸ்பி யோகேஷ் குமார் தலைமையில் மாவட்ட ஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அலெக்ஸ் அப்பாவு மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் கூடங்குளம் அணுமின் வளாக இயக்குனர் ஷாவந்த், திட்ட இயக்குனர் ஜாய் வர்கீஸ். மனிதவள மேம்பாட்டு அதிகாரி விஜயராணி உள்பட அணுமின் திட்ட அதிகாரிகளும் கலந்துகொண்ட சமாதான கூட்டத்தில் நாளை நடைபெற இருந்த எழுத்து தேர்வு தற்காலிகமாக ரத்து செய்யபடுகிறது என்றும். கூடன்குளம் அணுமின் நிலையத்திற்கு நிலம் கொடுத்த மக்கள் மற்றும் உள்ளூர் பகுதி மக்களுக்கு C பிரிவில் தேர்வு முறை இல்லாமல் பணி வழங்கிய பின்பு B பிரிவு தேர்வை நடத்திக் கொள்வது என்றும் விரைவில் C பிரிவு பணியாளர் பணி உள்ளூர் மக்களுக்கு 1999ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணி வழங்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது. இந்த தேர்வுக்கு 9000ற்கும் அதிகமானோர் விண்ணப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.