தாமிரபரணி ஆறு, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு திட்ட பணிகளில் பொன்னாக்குடி அருகே நான்கு வழிச்சாலையில் குழாய்கள் அமைக்கும் பணி இந்த மாத இறுதியில் முடிவடைந்து சோதனை ஓட்டமாக 1300 கன அடி தண்ணீர் எம்.எல்.தேரி வரை செல்லும் என திட்டப் பணிகளை ஆய்வு செய்த தமிழக சட்டப் பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு, நம்பியாறு, கருமணியாறு ஆகிய நதிநீர் இணைப்பு திட்டம் கடந்த 2009- ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது. 369 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. கடந்த 10 ஆண்டுகளாக இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு, பணிகள் மந்த நிலையில் நடந்து வந்தது . தற்போது இந்த திட்டத்திற்கு கூடுதலாக 872.45 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது.
வருகின்ற மார்ச் 31-ம் தேதிக்குள் நதிநீர் இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும் என்று நெல்லை வந்த முதல்வர் தெரிவித்திருந்தார். அதற்குள் பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் உத்தரவிட்ட நிலையில் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நெல்லை பொன்னாக்குடி அருகே நான்கு வழிச்சாலைக்கு மாற்றுப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் தற்காலிகமாக தண்ணீர் செல்லும் வகையில் குழாய்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை எட்டும் மேட்டூர் அணை
இந்த பணிகளை தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மற்றும் ஆட்சியர் விஷ்ணு உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பொன்னாக்குடி நான்குவழிச்சாலையில் மாற்றுப்பாதை அமைக்கப்பட்டு 1300 கன அடி தண்ணீர் செல்லும் வகையில் 420 குழாய்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் இந்த மாத இறுதியில் நிறைவு பெற்றுவிடும். இதனைத் தொடர்ந்து சோதனை ஓட்டமாக தண்ணீர் திட்டத்தின் இறுதிப்பகுதியான எம்.எல்.தேரி வரை கொண்டு செல்லப்படும்.
எம்.எல்.தேரி வரை 80 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டது. இன்னும் ஒருமாதத்தில் இந்த பகுதிக்கான பணி முடிவடைந்து விடும் . இதனை அடுத்து பொட்டல்விளை பகுதியில் ஒரு விவசாயி வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கும் விரைந்து முடிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும். மன்னார்புரம், கோட்டைகருங்குளம் ஆகிய பகுதிகளில் பணிகள் மெதுவாக நடந்து வருகிறது.
சாணி பவுடர், எலி மருந்து விற்பனைக்கு விரைவில் தடை - அமைச்சர் சுப்பிரமணியன்
கடந்த ஆட்சியில் இந்த பகுதியில் 6 முதல் 8 சதவீத பணிகள்தான் முடிவடைந்திருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பின் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு 45 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளது. முதுமொத்தான் மொழியில் 65 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. 3500 கன அடி கொள்ளவு கொண்ட இந்த கால்வாயில் இந்த ஆண்டு முதல் கட்டமாக விவசாயிகள் பயன்பெறும் வகையில் 1300 கன அடி தண்ணீர் கொண்டு செல்லப்படும். இதன் மூலம் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் முழு பலன் பெறாவிட்டாலும் 35 சதவீதத்திற்கு மேல் விவசாய நிலம் பயன்பெறும் என தெரிவித்தார்.