திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே தம்பி இறந்த சோகத்தில் அண்ணனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் ஒட்டுமொத்த கிராமமும் சோகத்தில் மூழ்கியது.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் அய்யூப்கான் புரம் காலனி தெருவைச் சேர்ந்தவர் அய்யாதுரை. இவரது மனைவி செல்லத்தாய். இவர்களுக்கு சுடலைமணி (25), பெருமாள் (15) என்ற இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்தனர். அய்யாதுரை சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். சுடலைமணி கூலி வேலை பார்த்து வந்தார். அவரது சகோதரர் பெருமாள் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று திடீரென அண்ணன் தம்பியான சுடலைமணி, பெருமாள் இருவரும் அடுத்தடுத்து வீட்டில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த மானூர் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கண்டதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
விசாரணைக்கு பயந்து வெள்ளி மோதிரத்தை விழுங்கிய கஞ்சா வியாபாரி
அதாவது தந்தையை இழந்த நிலையில் அண்ணன் தம்பி இருவரையும் அவர்களது தாய் செல்லததாய் கவனித்து வந்துள்ளார். குடும்ப சூழ்நிலை அறிந்து மூத்த மகன் சுடலைமணி கூலி வேலை பார்த்து தனது தாய்க்கு உதவியாக இருந்துள்ளார். அதேசமயம் அவரது தம்பியான பெருமாள் சரிவரப் பள்ளிக்கு செல்லாமல் சில தீய செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. எனவே தம்பியிடம் அண்ணன் என்ற முறையில் சுடலைமணி அறிவுரை கூறி தனது தாய்க்கு அவப்பெயர் ஏற்படாமல் நடந்து கொள்ளும்படி தெரிவித்துள்ளார்.
ரெட் அலர்ட்.. இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை.. 22 மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்..
ஆனால் அடிக்கடி அண்ணனின் அறிவுரை வழங்குவதை தொந்தரவாக எண்ணி மனமுடைந்த பெருமாள் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை கவனித்த சுடலைமணி தன்னால் தான் தனது தம்பி தற்கொலை செய்து கொண்டதாக எண்ணி வேதனை அடைந்துள்ளார். மேலும் தம்பி உயிரிழந்த சோகத்தில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அண்ணன், தம்பி இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.