உயரம் மட்டும் தான் சிறுசு; எங்களுக்கு தைரியம் ரொம்ப பெருசு: ஆட்சியரிடம் மனு அளித்த 3 வயது சிறுமி

By Velmurugan s  |  First Published Feb 14, 2023, 10:28 AM IST

எங்கள் அங்கன்வாடியில் ஒன்றுமே சரியில்லை. கலெக்டர் சார் நடவடிக்கை எடுக்க வேண்டும்: நெல்லையில் அங்கன்வாடியில் அடிப்படை வசதி கேட்டு மூன்று வயது பெண் குழந்தை மழலை நடையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியது.


நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை அன்று பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இன்று நடைபெற்ற முகாமில் காலை முதல் ஆர்வமுடன் பொதுமக்கள் மனு அளிக்க வந்தனர் இந்த நிலையில் மூன்று வயதே ஆன பெண் குழந்தை ஒன்று மழலை நடையுடன் கையில் மனுவை ஏந்தி ஆட்சியர் அலுவலகம் வந்த சம்பவம் அங்கிருந்தவர்களை திரும்பி பார்க்க செய்தது. 

இது குறித்து குழந்தையிடம் விசாரித்த போது, தனது பெயர் ஸபா ஹாதீயா என்றும் மேலப்பாளையம் அம்பிகாபுரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தான் படித்து வருகிறேன். அங்கு தங்களுக்கு கழிப்பிடம், விளையாட்டு உபகரணங்கள் உள்பட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. அங்கன்வாடியில் ஒண்ணுமே சரியில்லை என்று மழலை மொழியில் குழந்தை ஹாதீயா தெரிவித்தார். தொடர்ந்து தனது தந்தையுடன் சென்று மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனை சந்தித்து மனு அளித்தார். 

Tap to resize

Latest Videos

இதுகுறித்து குழந்தை ஸபா ஹதீயாவின் தந்தை ரசூல் காதர் மீரான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த அங்கன்வாடியில் பயின்று வருகின்றனர். குழந்தைகளுக்கு சத்துணவு முட்டைகள் கொடுப்பது வரவேற்கத்தக்கது. அதே சமயம் அங்கன்வாடி கட்டிடம் மிகவும் பழமையானதாக உள்ளது. குழந்தைகளுக்கு கழிப்பிட வசதி, விளையாட்டு உபகரணங்கள் வசதி முறையாக இல்லை. நீண்ட தூரம் உள்ள தொடக்கப் பள்ளியில் சென்று தான் குழந்தைகள் கழிவறையை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. 

கழிவறை இல்லாதது குறித்து எனது மகள் என்னிடம் தெரிவித்தார். மேலும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அதன் பெயரில் எனது மகள் இன்று மனு அளித்துள்ளார் என்று தெரிவித்தார். மழலை மொழி பேசும் வயதில் பெரும்பாலான குழந்தைகள் பெற்றோர்களைப் பிரிந்து அங்கன்வாடி செல்வதற்கே அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு மத்தியில் அங்கன்வாடிக்கு ஆர்வமுடன் செல்வதோடு மட்டுமல்லாமல் அங்கு அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து துணிச்சலுடன் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த குழந்தை ஸபா ஹாதீயாவின் செயல் பாராட்டுக்குரியது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டில் கஞ்சா போதைக்கு அடிமையான மகனை அடித்தே கொன்ற தந்தை

click me!