நெல்லையப்பர் கோயில் மூலஸ்தானம் வரை பர்தா அணிந்து சென்ற பெண்? பாதுகாப்பை பலப்படுத்துங்க! அலறும் இந்து முன்னணி.!

By vinoth kumarFirst Published Feb 8, 2023, 8:54 AM IST
Highlights

கோவில் பணியாளர்கள் யாரும் என்ன? ஏது? என்று கூட கேட்கவில்லை. தகவல் அறிந்து இந்து முன்னணி நிர்வாகிகள் வந்ததும் வெளியில் வந்த பர்தா அணிந்த நபர் நிற்காமல் ஓட்டம் பிடித்துள்ளார். 

நெல்லையப்பர் கோயிலில் பர்தா அணிந்து சென்ற பெண்கள் போட்டோ எடுத்தது குறித்து நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இது தொடர்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவிலுக்குள் கருப்பு நிற பர்தா அணிந்த நபர் மூலஸ்தானம் முன்பு வரை சென்று பல்வேறு இடங்களை படம் பிடித்துள்ளார் என தெரிய வருகிறது. கோவில் பணியாளர்கள் யாரும் என்ன? ஏது? என்று கூட கேட்கவில்லை. தகவல் அறிந்து இந்து முன்னணி நிர்வாகிகள் வந்ததும் வெளியில் வந்த பர்தா அணிந்த நபர் நிற்காமல் ஓட்டம் பிடித்துள்ளார். 

அந்த நபர் எதற்காக வந்தார்? என்ன கொண்டு வந்தார்? என்ன செய்தார்? என்பது மர்மமாக உள்ளது. கோவில் நிர்வாகம் தவறை பூசிமெழுவது போல் பதில் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு மிகுந்த நெல்லையப்பர் கோவிலிலேயே இந்த நிலை என்றால் மற்ற கோவில்களில் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இது திருக்கோவிலுக்கு ஒரு சூழ்நிலையில் ஆபத்தை ஏற்படுத்தகூடும். லுங்கி, டவுசர் அணிந்து வரக்கூடாது என அறிவிப்பு வைத்துள்ள கோவில்களில் பர்தா மட்டும் எப்படி அனுமதிக்கப்படுகிறது? 

பல வருடங்களுக்கு முன்பு வரை எல்லா கோவில்களிலும் கொடிமரம் முன்பு ஆகமவிதிப்படி இந்துக்கள் அல்லாதோர் செல்லக்கூடாது என்ற அறிவிப்பு பலகை இருக்கும். அது பல கோவில்களில் அகற்றப்பட்டுள்ளதே இது போன்ற சம்பவங்களுக்கு காரணமாகிறது. மீண்டும் அது போல அறிவிப்பு போர்டுகள் வைக்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து தெய்வங்களை வழிபட வருவோர் இந்து தெய்வ நம்பிக்கைக்யோடு இந்து கலாச்சாரப்படி வழிபாடு செய்வதே முறையாக இருக்கும். நெல்லையப்பர் கோவில் சம்பவத்தை படிப்பினையாக கொண்டு தமிழக கோவில்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார். 

இதனிடையே, அத்துமீறி நுழைந்த அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், கோயிலில் பாதுகாப்பை பலப்படுத்தவும் கோரி இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் தலைமையில் கண்களில் கருப்பு துணி கட்டிய நெல்லையப்பர் கோயில் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். 

click me!