திருநெல்வேலி மேலப்பாளையம் இஸ்லாமிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறி மாணவிகள் பள்ளியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் இஸ்லாமிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பெரும்பாலும் இஸ்லாமிய மாணவிகளே கல்வி பயின்று வரும் நிலையில் இந்த பள்ளியில் தாளாளராக குதுபுன் நஜீப் என்பவர் பொறுப்பு வகித்து வந்தார். இவர் அதே பள்ளியில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவிகள் 3 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் அந்த மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறி மாணவிகள் பள்ளி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து மாணவிகளின் பெற்றோர் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் திரண்டு மாணவிகளுக்கு ஆதரவாக பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன், பாளையங்கோட்டை வட்டாட்சியர் ஆனந்த பிரகாஷ், கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு வந்து மாணவிளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உடனடியாக பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர் கைது செய்யப்பட வேண்டும் அவ்வாறு செய்தால் மட்டுமே பள்ளி வளாகத்தில் இருந்து வெளியேறுவோம் என பெற்றோர் மற்றும் மாணவிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மேலப்பாளையம் காவல்துறையினர், தாளாளர் குதுபுன் நஜீப் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
கண்ணகிக்கு ஒற்றை சிலம்பு; எனக்கு ஒற்றை செங்கல் - மதுரையில் உதயநிதி பேச்சு
வழக்குப்பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து விரைவில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல் துறையினர் உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து மாணவிகள், பெற்றோர், இஸ்லாமிய அமைப்புகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டன. சிறுபான்மை மாணவிகள் அதிக அளவில் கல்வி பயிலும் பள்ளியில் தாளாளர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.