கொரோனாவிலிருந்து சிவகங்கை மாவட்டமும் முழுமையாக மீண்டுள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று மாலை நிலவரப்படி 2526 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிலிருந்து 1312 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் சென்னையில் தான் பாதிப்பு அதிகரித்து கொண்டிருக்கிறது. மற்ற அனைத்து மாவட்டங்களிலுமே கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே கொரோனா முழுமையாக கட்டுக்குள் வந்துள்ளது. சென்னையை தவிர வேறு எந்த மாவட்டத்திலுமே பெரியளவில் பாதிப்பில்லை. சில மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பாதிப்பே இல்லை.
சென்னையில் தான் அதிகபட்சமாக 1082 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவே இல்லாத பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 67 வயது முதியவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து ஆரஞ்சு மண்டலத்தில் இணைந்துள்ளது கிருஷ்ணகிரி மாவட்டம்.
தமிழ்நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்ட முதல் மாவட்டம் ஈரோடு. ஈரோட்டை தொடர்ந்து நீலகிரி, தூத்துக்குடி, தேனி ஆகிய மாவட்டங்களும் கொரோனாவிலிருந்து மீண்ட நிலையில், தற்போது சிவகங்கை மாவட்டம் கொரோனாவிலிருந்து முழுமையாக மீண்டுள்ளது.
சிவகங்கையில் மொத்தம் 12 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 11 பேர் ஏற்கனவே குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், எஞ்சிய ஒருவரும் இன்று குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனார். இதையடுத்து கொரோனாவிலிருந்து மீண்ட மாவட்டங்கள் பட்டியலில் சிவகங்கை சேர்ந்துள்ளது.
ஈரோட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 70 பேரில் 69 பேர் குணமடைந்தனர்; ஒருவர் உயிரிழந்தார். நீலகிரியில் தொற்று இருந்த 9 பேருமே குணமடைந்தனர். தேனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 43 பேரும் குணமடைந்தனர். தூத்துக்குடியில் 27 பேரில் 25 பேர் குணமடைந்தனர்; இருவர் உயிரிழந்தனர்.
எனவே இதுவரை கொரோனாவிலிருந்து முழுமையாக மீண்ட மாவட்டங்கள்: ஈரோடு, நீலகிரி, தூத்துக்குடி, தேனி, சிவகங்கை.
கரூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 42 பேரும் குணமடைந்த நிலையில், புதிதாக ஒருவருக்கு தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.