சிவகங்கை அருகே பேச்சுப்போட்டியில் கலந்துகொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பரிசுபெற்ற மாணவி ஆன்லைன் வகுப்பால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை அருகே பேச்சுப்போட்டியில் கலந்துகொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பரிசுபெற்ற மாணவி ஆன்லைன் வகுப்பால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே செல்லப்பனேந்தலைச் சேர்ந்தவர் சத்யமூர்த்தி. ஆட்டோ டிரைவர். மனைவி தனலட்சுமி. இவர்களது மகள் சுபிக்ஷா(15), மகன் சுமன் (12). சுபிக்ஷா மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி மற்றும் மாநில, மாவட்ட அளவிலான பேச்சு போட்டி, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு பெற்றுள்ளார். மதுரையில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு துவக்க விழாவை ஒட்டி, மாவட்ட அளவில் நடந்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் சுபிக்ஷா பரிசு பெற்றுள்ளார்.
கொரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், தற்போது ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில் சுபிக்ஷாவுக்கு பாடங்கள் சரிவர புரியாமல் இருந்துள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைந்து விடுமோ என்ற மன கவலையில் சுபிக்ஷா இருந்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த மாணவி வீட்டின் பின்புறம் உள்ள கழிப்பறையில் தூக்குப்போட்டுக்கொண்டார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே அவரை மீட்டு திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதன் பின்னர் மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து திருப்புவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் வகுப்பு புரியாததால் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.