சிவகங்கை அருகே இன்று காலை சமையல் செய்யும் போது கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தாய் மற்றும் 2 குழந்தைகள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிவகங்கை அருகே இன்று காலை சமையல் செய்யும் போது கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தாய் மற்றும் 2 குழந்தைகள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே உள்ள கே.உத்தம்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா. வெளிநாட்டில் வேலை பார்க்கும் இவர் சமீபத்தில் ஊர் திரும்பினார். கணவர் கருப்பையா வேலைக்காரணமாக வெளியே சென்றுள்ளார். வீட்டில் மனைவி சின்னம்மாள் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டில் மகன் வீரன் (5), மகள் திவ்ய வர்ஷினி (3) குழந்தைகள் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் ஓட்டு வீடு சின்னாபின்னமானது. இதில் சின்னம்மாள் மற்றும் அவரது அருகில் நின்று கொண்டிருந்த வீரன், திவ்ய வர்ஷினி ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கியாஸ் சிலிண்டர் வெடித்த சமயத்தில் கருப்பையா வெளியே சென்றிருந்ததால் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். எரிவாயு சிலிண்டர் வெடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.