சிவகங்கை வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை வரவேற்று ஆரத்தி எடுத்த பெண்களுக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகி தலா ரூ.50 வெளிப்படையாக விநியோகம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட எம்பி கார்த்தி சிதம்பரம் பெரியகோட்டை, இடைக்காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட பின்னர் பச்சேரியில் உள்ள காங்கிரஸ் பிரமுகர் சி.ஆர்.சுந்தரராஜன் என்பவர் வீட்டிற்கு மதிய உணவிற்கு சென்ற பின்னர் அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.
இந்நிலையில் அங்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பச்சேரிக்கு சி.ஆர்.சுந்தர்ராஜன் வீட்டிற்கு வந்த்தார். அப்போது அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் பாரம்பரியமான ஒயிலாட்டம் மற்றும் கொம்பு வாத்தியங்களுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டடது.
அப்போது அவரது வீட்டிற்குள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த கார்த்தி சிதம்பரம் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையை வரவேற்க வராமல் ஓய்வெடுத்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் ஓய்வை முடித்துக் கொண்டு பிரச்சாரத்திற்கு புறப்பட்டுச் சென்றார். இதன் பின்னர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். மாநில தலைவர் வந்தது கூட தெரியாமல் எம்பி கார்த்தி சிதம்பரம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் இன்று மானாமதுரை தாலுகாவிற்க்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். இடைக்காட்டூரில் பரப்பரை மேற்கொள்ள வந்த கார்த்திக் சிதம்பரத்திற்கு ஆரத்தி தட்டுகளுடன் பெண்கள் உற்சாக வரவேற்பு வழங்கினர். அதனை ஏற்றுக் கொண்ட கார்த்தி சிதம்பரம் தொடர்ந்து திமுக அரசின் சாதனைகளையும், பாஜக அரசின் குறைகளையும், எடுத்து கூறி பிரச்சாரம் செய்தார். பின்னர் வாக்காளர்களை தனக்கு கை சினத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அவர் சென்ற பிறகு, அவரை வரவேற்பதற்காக அழைத்து வரப்பட்ட பெண்களுக்கு இடைக்காட்டூர் திமுக ஊராட்சி மன்ற தலைவர் தலா 50 ரூபாய் நோட்டுகளை அனைவருக்கும் வழங்கினார். தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி தொடர்ந்து பண பட்டுவாடா செய்யப்பட்டதும், அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.