திடீரென வீசும் துர்நாற்றம்..! நிறம்மாறிய தண்ணீர்..! மேட்டூர் அணையில் நீடிக்கும் மர்மம்..!

By Manikandan S R SFirst Published Dec 12, 2019, 12:54 PM IST
Highlights

மேட்டூர் அணையில் தண்ணீர் பச்சை நிறத்தில் மாறியதுடன் துர்நாற்றம் வீசுவதால் சுற்றுப்புறத்தில் இருக்கும் கிராமத்தினர் அச்சமடைந்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பலத்த மழை பெய்து வந்ததையடுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. மழையின் தீவிரம் அதிகமாகவே மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை கடந்த செப்டம்பர் மாதம் எட்டியது. அதன்பிறகு மூன்று முறை மேட்டூர் அணை நிரம்பியது.

இந்த வருடம் மட்டும் மேட்டூர் அணை 4 முறை நிரம்பியுள்ளது. தற்போது வரையிலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியிலேயே நீடிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனிடையே மேட்டூர் அணையில் தண்ணீர் பச்சை நிறமாக காணப்படுவதாகவும் துர்நாற்றம் வீசுவதாகவும் தகவல் வந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து ஒகேனக்கல் வழியாக வரும் காவிரி நீரில் கழிவு நீர் கலப்பதால் பச்சை நிறமாக மாறியிருப்பதாக கூறப்படுகிறது.

மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதிகளான கோட்டையூர், பண்ணவாயில், சேத்துக்குளி ஆகிய இடங்களில் கடந்த மாதமே தண்ணீர் பச்சை நிறமாக மாறியதுடன் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பாக திறனூட்டப்பட்ட நுண்ணுயிர் தெளிப்பான் அப்பகுதிகளில் தெளிக்கப்பட்டிருக்கிறது. இங்கிருந்து தான் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வருகிறது. இதன்காரணமாக மேட்டூர் அணையிலும் தற்போது பச்சை நிறத்தில் தண்ணீர் காணப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது.

16 கண் மதகு பகுதிகளில் பச்சை நிறத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் உபரி நீர் வழியாகவும் அவை வெளியேறுகிறது. இதனால் அணையை ஒட்டியிருக்கும் கிராமங்களில் சுகாதார கேடு ஏற்பட வாய்ப்பிருப்பதாக கிராம மக்கள் அச்சப்படுகின்றனர். உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

click me!