மகளின் திருமணத்தால் தலைவிரித்தாடிய கடன்தொல்லை..! மனைவியுடன் தூக்கில் தொங்கிய பால் வியாபாரி..!

By Manikandan S R SFirst Published Dec 11, 2019, 4:19 PM IST
Highlights

சேலம் அருகே அதிகமான கடன் தொல்லையால் பால் வியாபாரி மனைவியுடன் தற்கொலை செய்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஜாகிர்ரெட்டிபட்டியைச் சேர்ந்தவர் மணி(56). இவரது மனைவி கண்மணி(49). இந்த தம்பதியினருக்கு பரமேஸ்வரி, வளர்மதி என இரண்டு மகள்கள் உள்ளனர். வீட்டின் முன்பு கடை அமைத்து பால் வியாபாரம் செய்து வரும் மணி, மகள்கள் இருவருக்கும் திருமணம் முடித்து விட்டார். இதனால் வீட்டில் கணவன் மனைவி இருவர் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளனர்.

பால் வியாபாரம் செய்து வந்ததால் தினமும் காலையிலே மணியின் வீட்டு வாசலில் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் வந்து பால் வாங்கிச் செல்வார்கள். நேற்று முன்தினமும் பலர் பால் வாங்குவதற்காக வந்தனர். ஆனால் 7 மணியை கடந்தும் மணியின் வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த மக்கள், ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது மணியும் அவரது மனைவியும் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தனர். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். மணியின் மகள்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த காவலர்கள் வீட்டின் கதவை உடைத்து இருவரது உடலையும் மீட்டனர். தாய், தந்தை பிணமாக கிடப்பது கண்டு மகள்கள் கதறி துடித்தனர். உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அதிகமான கடன் தொல்லையால் மணியும் அவரது மனைவியும் தற்கொலை செய்தது தெரிய வந்தது.

மணி தனது இரண்டாவது மகளின் திருமணத்திற்காக இரண்டு லட்சத்திற்கு மேல் வெளியில் கடன் பெற்றுள்ளார். ஆனால் கடனை அவரால் அடைக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்க தொடங்கியுள்னர். கடனை அடைக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்து மணி, மனைவியுடன் தற்கொலை செய்திருக்க கூடும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும் கந்து வட்டி தொல்லை எதுவும் இருந்ததா என்கிற கோணத்திலும் காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

click me!