திறந்தவெளி போர்வெல்களுக்கு சமாதி கட்டும் நல்ல உள்ளங்கள்..! பாராட்டுவோமே..!

By Manikandan S R S  |  First Published Nov 12, 2019, 11:35 AM IST

சேலத்தில் மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக்கிணறு ஒன்று தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் முயற்சியால் மூடப்பட்டுள்ளது.


திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இருக்கும் நடுகாட்டுப்பட்டி கிராமத்தில் இரண்டு வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான். 80 மணி நேரம் நடந்த மீட்புப்பணிகளின் இறுதியில் சுர்ஜித்தை சடலமாக தான் மீட்க முடிந்தது. இந்த சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி இந்தியா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. சுர்ஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று நாடே பிராத்தனை செய்து வந்த நிலையில் அவனின் மரணச்செய்தி எல்லோரையும் உலுக்கி விட்டது.

Tap to resize

Latest Videos

இதையடுத்து இனிமேலும் ஒரு உயிரும் ஆழ்துளைக்கிணற்றால் போய்விடக்கூடாது என்றும் அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அரசும் அதற்கான தீவிர முயற்சிகளில் இறங்கியது. மாவட்ட ஆட்சியர்களின் கண்காணிப்பில் பயனற்ற ஆழ்துளைக்கிணறுகளை மூட உத்தரவிட்டது. பல்வேறு இடங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இந்த பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சேலத்தில் மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக்கிணறு, சமூக நல அமைப்பு ஒன்றின் முயற்சியுடன் மூடப்பட்டிருக்கிறது. சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே இருக்கிறது சமத்துவபுரம். இங்கிருக்கும் சின்னத்துரை எஸ்டேட்டில் ஆழ்துளை கிணறு ஒன்று மூடப்படாமல் இருந்துள்ளது. இதையடுத்து 'சிக்த் சென்ஸ்' என்கிற தொண்டு நிறுவனத்தின் கவனத்திற்கு இது சென்றது. கடந்த 5ம் தேதி அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் 'ஹலோ' என்கிற சமூக ஊடகத்தின் வாயிலாக ஆழ்துளைக்கிணற்றை மூடுவதற்கான முயற்சிகளை எடுத்தனர்.

இதுதொடர்பான விபரங்களை #safeborewell விழிப்புணர்வு பிரச்சாரத்துடன் சமூக ஊடகங்களில் பரவ விட்டதை அடுத்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தது. மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக்கிணறு சிமெண்ட் பூசி முழுவதுமாக மூடப்பட்டது. இதையடுத்து அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆழ்துளைக்கிணற்றை மூட உதவி செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர். தன்னார்வ தொண்டர்களின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

click me!