நாங்குநேரியில், பள்ளி மாணவன் மீது கோரத் தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அதே போல பள்ளி மாணவர்களிடையேயான ஒரு மோதல் சம்பவம் குறித்த தகவல், வெளியே கசிந்துள்ளது.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் உள்ள மாண்ட்ஃபோர்டு பள்ளியில், ஏழை மாணவர்களுக்கு வழங்க, வழக்கம் போல் மாண்ட்ஃபோர்டு பள்ளியால் செய்யப்படும் கேக்கை ஏலம் எடுக்கும் நிகழ்வு, கடந்த வாரம் நடத்தப்பட்டுள்ளது. இதில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவாகி, சண்டை ஏற்பட்டுள்ளது சண்டையைத் தொடர்ந்து, ஹாஸ்டலில் தங்கியிருந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் சிலரை, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் சிலர் அடித்துள்ளனர்.
இதில் ஸ்ரீ ரித்தீஷ் என்ற பத்தாம் வகுப்பு மாணவர் பதில் தாக்குதல் நடத்த, நெல்லை மாவட்டம் கயத்தாறில் உள்ள தனது அண்ணன்களை ரவுடி கும்பலோடு வரவழைத்துள்ளார். ஸ்ரீ ரித்தீஷின் அண்ணன்களான மாணிக்கம் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா ஆகியோர், மாண்ட்ஃபோர்டு பள்ளி தலைமை ஆசிரியர் டோமினிக் சேவியோவிடம், தகராறு குறித்து நேரடியாக வந்து கேட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பள்ளி விதிகளுக்கு முரணாக, தங்களது தம்பியை, இரவு 11.30 மணியளவில், வெளியேவும் அழைத்துச் சென்று விட்டனர். இதைத்தொடர்ந்து காலையில் பள்ளி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே 15 ரவுடிகளுடன் உள்ளே நுழைந்த மாணிக்கம் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா தலைமையிலான ரவுடி கும்பல், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ- மாணவிகளையும் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர்களையும் கடுமையாக தாக்கியுள்ளது.
தாக்குதலில், பெங்களூரைச் சேர்ந்த ஒரு மாணவனுக்கு மண்டை உடைந்தும் சேலத்தைச் சேர்ந்த ஒரு மாணவனுக்கு கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டது. மேலும் பள்ளி வளாகத்தில் இருந்த 20 லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்களையும் அடித்து நொறுக்கி, ரவுடிகள் சேதப்படுத்தி உள்ளனர். தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த, 12-ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள், தங்களது பிள்ளைகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதற்கு காரணமான பத்தாம் வகுப்பு மாணவன் ஸ்ரீ ரித்தீஷ், தாக்குதல் நடத்திய ஶ்ரீரித்தீஷின் அண்ணன்கள் மாணிக்கம் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா உள்ளிட்ட ரவுடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால் தலைமை ஆசிரியர் டோமினிக் சேவியோ உரிய பதில் அளிக்காததைத் தொடர்ந்து, விவகாரம் காவல்துறையின் கவனத்திற்கு சென்றது. ஆனாலும் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் குறை கூறப்படுகிறது. மாணவர்களுக்கிடையே பள்ளி வளாகத்திற்குள் ஏற்பட்ட தகராறு, ரவுடிகளை பள்ளிக்குள் வரவழைத்து கொலை வெறி தாக்குதல் நடத்தும் அளவிற்கு சென்றிருப்பது, ஏற்காட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாங்குநேரியில், பள்ளி மாணவர் தாக்கப்பட்ட கொடூர சம்பவத்தின் அதிர்ச்சி அலைகள் நாடு முழுவதும் எழுந்துள்ள நிலையில், மாண்ட்ஃபோர்டு பள்ளி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recharge Plan : ஒரே ரீசார்ஜ்.. 180 நாட்கள் வேலிடிட்டி.. இவ்வளவு கம்மி விலைக்கா? முழு விபரம் இதோ !!
Jio Plan : ரூ.399 ரீசார்ஜ் போதும்.. குடும்பத்துக்கே அன்லிமிடெட் ஆஃபர் - முழு விபரம் இதோ !!