நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்..! மேலும் ஒரு மாணவர் அதிரடியாக கைது..!

By Manikandan S R SFirst Published Oct 1, 2019, 4:30 PM IST
Highlights

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தருமபுரி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்த இர்பான் என்கிற மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேனி மருத்துவ கல்லூரியில் உதித் சூர்யா என்கிற மாணவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து சேர்ந்ததாக தெரியவந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருக்கிறார். இந்த சம்பவத்தால் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்திருக்கும் மாணவர்களின் ஆவணங்களை மீண்டும் சரிபார்க்குமாறு மருத்துவ கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேசனை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை செய்தபோது ராகுல், பிரவீன், அபிராமி, இர்பான் என மேலும் 4 மாணவர்கள் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நடந்த விசாரணையில் ராகுல், பிரவீன், அபிராமி ஆகியோர் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது உறுதிப்பட்டது, அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆள்மாறாட்ட புகாருக்கு ஆளாகியிருக்கும் மாணவர் இர்பான் மட்டும் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் நேற்று அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்தது தொடர்பான புகார் வெளியானதைத் தொடர்ந்து முதலாமாண்டு சேர்ந்திருக்கும் மாணவ மாணவிகளின் ஆவணங்கள் மீண்டும் சரி பார்க்கப்பட்டன. அப்போது தர்மபுரி மருத்துவக்கல்லூரியில் புதியதாக சேர்ந்த 100 பேரின் ஆவணங்களை உடனடியாக ஆய்வுக்காக ஒப்படைக்கும்படி கல்லூரி நிர்வாகம் கூறியிருந்தது. ஆனால் மாணவர் முகமது இர்பான் ஆவணங்களை ஒப்படைக்காமல் இருந்திருக்கிறார்.

கடந்த 9ம் தேதி குடலிறக்கம் நோய் சிகிச்சைக்காக விடுப்பில் சென்ற அவர் விடுதியில் இருந்த அவரது பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். கல்லூரி நிர்வாகம் சார்பில் அவரை தொடர்புகொண்டு ஆவணங்களை பெற முயற்சி நடந்தது. ஆனால் அவர் எங்கே போனார்? என்ன ஆனார்? என்று தெரியாமல் இருந்திருக்கிறது.

இதைத்தொடர்ந்து வாணியம்பாடி வீட்டின் முகவரிக்கு கல்லூரி நிர்வாகம் ரிஜிஸ்டர் தகவல் அனுப்பியது. செப்டம்பர் 30ம் தேதிக்குள் முதலாமாண்டு சேர்க்கை ஆவணங்கள், நீட்தேர்வு ஆவணங்கள், ஹால்டிக்கெட் மற்றும் மேல்நிலை வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றோடு நேரில் வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது சம்பந்தமாக கல்லூரி நிர்வாகம் சென்னையில் இருக்கும் மருத்துவக் கல்வி இயக்குனரகம் அலுவலகத்துக்கும் சிபிசிஐடி போலீசாருக்கும் தகவல் அனுப்பியது. 

மாணவர் இர்பான் தலைமறைவாக இருந்ததால் அவர் ஆள்மாறாட்டம் செய்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் நிலவி வந்தது. இந்த நிலையில் சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே அவர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

click me!