சேலம் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 19 டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 6500க்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் அரசின் அனுமதியுடன் பார்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் பல இடங்களில் அனுமதியின்றி டாஸ்மாக் பார்கள் செயல்பட்டு வருவதாகவும் இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் புகார்கள் வந்து கொண்டிருந்தன. இதைத் தொடர்ந்து இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது.
undefined
இதன் அடிப்படையில் சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் பார்கள் அனுமதியின்றி செயல்படுகிறதா என்று அதிகாரிகள் ஆய்வு நடத்த முடிவு செய்தனர். அதனுடன் மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா? என்றும் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் சேலம் மாவட்டத்தில் மட்டும் 19 டாஸ்மாக் பார்கள் அனுமதியின்றி செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட டாஸ்மாக் பார்களை அதிகாரிகள் அதிரடியாக பூட்டி சீல் வைத்தனர். மேலும் அனுமதியின்றி பார்களை நடத்திய 19 பேர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்க காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தில் 211 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன இவற்றில் 40 கடைகளுக்கு மட்டுமே பார் வசதி கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.