சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மூன்று வயது மகனின் அறுவை சிகிச்சைக்காக அரசு உதவ வேண்டுமென தந்தை ஒருவர் மனு அளித்திருக்கிறார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ராமன் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு தங்கள் பிரச்சனைகளை கோரிக்கை மனுவாக ஆட்சியரிடம் அளித்தனர். அவர்களிடம் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் ராமன் தெரிவித்தார்.
undefined
இதனிடையே இந்த கூட்டத்திற்கு தாரமங்கலம் அருகே இருக்கும் சின்னபட்டியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்கிற தறி தொழிலாளி வந்திருந்தார். இவர் தனது இடது கையை இழந்த மூன்று வயது மகனான ஜெயப்பிரகாசை உடன் அழைத்து வந்திருந்தார். ஜெயபிரகாஷ் அறுவை சிகிச்சைக்காக அரசு உதவ வேண்டும் என்று ஆட்சியரிடம் வெங்கடேஷ் மனு அளித்தார்.
11 மாத குழந்தையாக ஜெயப்பிரகாஷ் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கிருந்த விசைத்தறி இயந்திரத்தில் அவனது இடது கை சிக்கி கை முற்றிலும் துண்டானது. இதையடுத்து சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் ஜெயபிரகாசுக்கு தற்போது கையில் எலும்பு வளர்ச்சி அடைந்துள்ளது. அதை அகற்றுவதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அதற்கான செலவை ஏழ்மை நிலையில் இருக்கும் தன்னால் ஈடுகட்ட முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அதற்காக முதல்வரின் மருத்துவ காப்பீட்டு அட்டையும் நிதி உதவியும் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்திருக்கிறார். அவரது மனுவை விரைந்து பரிசீலிப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.