
சேலம் இரும்பாலை அருகே உள்ள வேடுகாத்தம்பட்டி கோயில் திருவிழாவில் மோகன்ராஜ் என்பவருக்கும் காளியப்பன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 16ம் தேதி வீட்டில் இருந்த மோகன் ராஜ்யையும் அவரது நண்பரையும் காட்டிற்குள் கடத்தி சென்று 13 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக தாக்கியது மட்டுமல்லாமல் கத்தியாலில் வெட்டினர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிய வந்ததை அடுத்து இரும்பாலை காவல்துறையினர் படுகாயமடைந்த மோகன்ராஜ் மற்றும் ஜீவானந்தமாக இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மோகன்ராஜ் உயிரிழந்தார். மேலும் ஜீவானந்தம் என்ற இளைஞர் காயத்துடன் சிகிச்சை பெற்று வந்தார். இது தொடர்பாக இரும்பாலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதனிடையே மோகன்ராஜ் மற்றும் ஜீவானந்தம் ஆகிய இருவரையும் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து இரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து காளியப்பன், தங்கராஜ், இளங்கோ, சூர்யா பிரகாஷ், கவினேஷ் மற்றும் அன்பழகன், பசுபதி, ஜீவா உள்பட 13 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர்களில் காளியப்பன், தங்கராஜ், இளங்கோ, சூர்யா பிரகாஷ், கவினேஷ் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய இரும்பாலை இன்ஸ்பெக்டர் சின்னதங்கம் மாநகர தலைமையிட துணை கமிஷனர் கீதா ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரிக்கு பரிந்துரை செய்தனர். இதனை ஏற்றுக் கொண்ட கமிஷனர் காளியப்பன் உட்பட ஆறு பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.