
சேலத்தில் 4வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பொன்பாண்டியனை அலுவலக உதவியாளர் பிரகாஷ் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக பொன்பாண்டியனை என்பவர் பணிபுரிந்து வருகிறார். அவரது அலுவலக உதவியாளராக பிரகாஷ் என்பவர் உள்ளார்.
அண்மையில் பிரகாஷ் வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக தெரிகிறது. அவரது பணியிட மாற்றத்திற்கு நீதிபதி பொன்பாண்டியன் தான் காரணம் என பிரகாஷ் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை நீதிமன்ற வளாகத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நீதிபதி பொன்பாண்டியனின் மார்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் நீதிபதி அலறியுள்ளார். பின்னர், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கத்தி குத்தால் காயமடைந்த நீதிபதியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, கத்தி குத்து சம்பவ இடத்தில் ஈடுபட்ட பிரகாஷ் என்பவரை போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.